பெண்ணே ஏன் உனக்கு இந்த நிலை
இந்நாட்டில் நம் நாட்டில்
இன்று வரை ஒருத்தி
கருவில் சுமப்பது
ஆணா பெண்ணா
என்று முன்னரே
அறிந்து கொள்வது குற்றம்
ஆனால் பெற்ற குழந்தை
பெண் என்றால் அந்த
பால் மணம் மாறா சேயை
கள்ளிப்பால் கொடுத்து
விழி பிதுங்கி நாடி நிற்க
நொடியில் மாய்த்து விடுகிறார்களே
பாவிகள் இது என்ன கொடுமை
இது அறியாமை ஆகாது
விலங்கினமும் செய்ய நினைக்கா
கொடூரம்
இதை செய்பவர் ஒரு பெண்ணே
என்று கேட்கையில் என்ன
இவர்கள் தான் புராணம் சொல்லும்
அரக்கிகளா என்று நினைக்க தோன்றும்
ஆண் பெண் சிசுவாய் கிடப்பது
ஒரு பெண்ணின் கருவிலே
பெண் இல்லையேல்
மக்கள் பிறப்பேது ஆனால்
பெண்ணிற்கு சம உரிமை இல்லை
அந்த ஈசனே அதை அளித்தபின்னும்
அதை ஏற்க மறுக்கிறான்
அவன் படைத்த மனிதன் !
இங்கு இறைவர் பல பல உருவில் உண்டு
ஒவ்வோர் இறைவற்கு இறைவியும் உண்டு
இறைவனில் ஓர் பாதியாய் இறைவிகள்
அமைந்து இருப்பது உண்டு
சக்தியாம் இறைவிக்கு தனிக்கோயில் ஏராளம்
சக்தியாய் மாகாளியாய் கொற்கையாய் அவளை
வரன்கள் நாடி நாள் தோறும் பூஜிப்பர்
தீக்குளிப்பர் இன்னும் ஏதேதோ செய்வர்
ஐயோ அந்த பெண்ணை மட்டும் ஏன்
சக்தியாய் காண தவருகிறார்
தெருவில் சென்றால் பெண்ணிற்கு தொல்லை
தனியே சென்றால் தீயோர் கற்பையும்
சூறையாடுவர்
நேற்றைய பெண் சமயற்கட்டிலும்
இரவில் படுக்கை அறையிலும்
இன்றும் அவள் நிலை மாறவில்லை
எல்லாப் பணி செய்த பின்னும்
பெண் தேனீப் போல் வெளியில் பணி செய்து
பொருள் ஈட்டி வீட்டைப் பேணுவால்
கைம்மாறு ஏதும் எதிர்பார்க்காமல்
பெண் சிசுவை மாய்தல் கொலை பாவம்
பெண்ணை தாயாய் சேயாய் சகோதரியாய்
என்றும் போற்றி காத்திடல் வேண்டும்
இல்லையேல் பெண்ணே இல்லாமல் போவாள்
ஒரு நாள் மனித வர்க்கமே இல்லாமல் போகும் .