உன் மெல்லிய குரலின் தீட்சண்யம்

நீ எழுதும்
என் கவிதையும்
நான் எழுதும்
உன் கவிதையும்
இடம் மாறி பொருள்
தேடும் நாளில்
நாம் பிரிந்தே கிடக்கிறோம்...
எந்தவொரு பாதைகளின்
முடிதலாய்
ஓங்கி ஒலிக்கும்
குரலாய் பெரும்பாலும்
உம் மௌனங்களே
விதைக்கின்றன மிகப்
பெரிய சத்தத்தை......
நின்ற இடத்தில்
இன்னொரு விரல்
முளைக்க வாதிடும்
பத்தியாய்
சொற்றொடர் நீளும் உன்
காகிதத்தில் விழி இழந்த
பறவைகளாய்
என் கிறுக்கல்கள்....
நீ வானம் சமைத்த
அன்று
நான் வண்ணம் வாங்கப்
போயிருந்தேனோ
என்னவோ....
இனி வானமும் சேர்ந்து
வாங்குவேன் என்பதே
என் நிஜத்தின் பார்வை...
வந்து போன
நாட்களும்
வராமலே போன நாட்களும்
பேசிக் கொள்ளும் ரகசியங்களில்
உன் மெல்லிய குரலின்
தீட்சண்யம்
அனேகமாக உன்
கனவாகவே இருக்கக் கூடும்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (30-Jul-16, 9:21 pm)
பார்வை : 156

மேலே