முள்

நேற்றைய நிலவொன்றும்
அத்தனை பிடித்தமானதாய்
இருந்திருக்கவில்லை தான்
என் அறை விளக்கோடு
ஒப்பிடுகையில்...
இன்னும் திறக்கப்படாத
அந்த மரப் பெட்டிக்குள்
என்ன இருக்குமென்ற கற்பனை
தீர்ந்து போய் விடக் கூடாதென
இன்னும் திறக்காமலே
வைத்திருக்கிறேன்
அந்தப் பெட்டியை...
இருள் மங்கிய வெளிச்சத்தில்
மட்டும் படிக்கலாமென்று
சிறு புத்தகமொன்றை
பத்திரப்படுத்தி இருந்தேன்..
இரவு விளக்கின் மங்கிய ஒளியில்
அந்தப் புத்தகத்தின் பக்கமொன்றில்
பதிந்த என் நிழல் உருவத்தைப்
பார்த்துக் கொண்டே இருந்தேன்..
விடிந்து விட்டது...
கருப்பு வெள்ளை மழை
கடைசி கணத் தூரல்
சங்கிலியோடு பிணைந்திருந்த பூ
சாலையோரம் நசுங்கியிருந்த
கைக்குட்டை
சருகாகிக் கொண்டிருந்த சிறகுகள்
மறைத்து வைத்திருந்த கத்தி
கணுக்கால் கிழித்த முள்
கொஞ்சம் கண்ணாடி சிதறல்கள்
முட்களுக்குள்ளான இடைவெளிகள்
கடந்த யுகமொன்றின் கடைசி நொடியென
நட்சத்திரங்கள் மறைந்து போன
இன்றைய இரவிலும்
தேடிக் கொண்டிருக்கிறேன்
இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்த
அந்தக் கடைசி நாள் கனவை...- கிருத்திகா தாஸ்நன்றி : கீற்று

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (4-Aug-16, 10:27 pm)
Tanglish : mul
பார்வை : 657

மேலே