சுயநலம்
தன் பிள்ளை போன்று
பிறர் பிள்ளை மீதும்
தோன்றாத அன்பு
உயர்வல்ல
அதுவோர் பெற்றவரின்
சுயநலம்
தன் பெற்றோர் போன்று
பிற முதியோரின் மீது
எழும்பாத அன்பு
உயர்வல்ல அதுவோர்
பிள்ளையின் சுயநலம்
தன் நண்பன் போன்று
பிறர் மீது செலுத்தாத அன்பு
உயர்வல்ல அதுவோர்
நண்பனின் சுயநலம்
தன் சொந்தம் போல
பிறருக்கும் உதவாத அன்பு
உயர்வல்ல அதுவோர்
சொந்தத்தின் சுயநலம்
சுயநலங்கள் பார்த்து
சுற்றத்தை சேர்த்து
கூடுவதோ பாசம் அது
உண்மையில் வேஷம்
தனதென்று எண்ணாமல்
தான் மட்டும் உண்ணாமல்
சாதிகளை பாராது
மதம் தன்னை காணாது
பணம் தன்னில் வீழாது
பதவிகளை பாராது
எவர் வரினும் வருக
எனதன்பு பெறுக
என்றுரைக்க இயாத
எதுவுமே அன்பில்லை அது
அன்பென்னும் போர்வைக்குள்
வாழ்கின்ற சுயநலமே