வெள்ளைப் பூக்கள்

தென்றல் தீண்டி தேகம் சிலிர்க்குதே...
கன்னியிவள் கோலத்தில் அகம் வலிக்குதே...
வண்ணங்கள் தொலைத்த வெள்ளைப் புறாயிங்கு
திண்ணையைத் தாண்டினாலே சமூகம் வெறுக்குதே......
கங்கையில் நனைந்தாலும் கரையாத பாவமென்று
மங்கள விழாவில் சேர்த்திடவும் மறுக்குதே...
விதியின் விளையாட்டில் பலியாகி நிற்கின்றாளே...
பதியினை இழந்து இளமயில் துடிக்கின்றாளே......
மஞ்சம் உறங்காது இமைகள் விரித்து
நெஞ்சம் தாங்காது கண்கள் உருகுதே...
வஞ்சிகள் பேசிடும் அனல் மொழிகளில்
மஞ்சள் பூசிய மதிமுகம் கருகுதே......
மனையாள் இறந்ததும் மறுமணம் முடிக்கின்றார்...
மங்கை இவளையோ?... மதிலுக்குள் பூட்டுகின்றாரே...
பாறைக்குள் ஈரமுண்டு என்பதை அறிந்தோர்
பாவைக்குள் இதயமுண்டு என்பதை மறந்தாரே......
மண்ணில் முளைத்த வன்கொடுமை அறுத்து
பெண்மைக்கு வாராதோ வசந்த நாட்கள்...
உணர்வுகளுக்கு உயிர்க் கொடுத்து மீண்டுமொரு
மணமாலையில் இணைந்துப் புன்னகைக்காதோ பூக்கள்......