காலமே கவிதை நண்பா

வானமே எல்லை கொண்ட
......வாலிபக் காதல் வந்தால்
மானமே போயும் நெஞ்சில்
.......மறந்திட முடியார் வாழ்வில்
கானமே தனிமை போக்கும்
.......காய்ந்துயிர் வேகும் தன்னுள்
ஊனமே அடைந்தும் எண்ணார்
........உலகிது மாயம் என்றே !

ஆரணங் கவளால் வெற்றி
....அடைந்தனன் என்று நாளும்
பாரணங் கொண்டால் வஞ்சம்
.....பறந்திடும் பஞ்சாய் ! வாழும்
காரணப் பொருளாய் ஏற்றுக்
.....கயமைகள் களைந்தால் வஞ்சி
பூரணப் பொய்கை வாழும்
.....புண்ணியக் கமலம் ஆவாள் !

காரிகை மனத்தைச் சேரும்
...........காதலால் வந்த கண்ணீர்
தூரிகை நழுவித் தன்னால்
..........துயர்வரைந் தழுத போதும்
சாரிகை எடுத்துச் சென்ற
...........சருகதாய் நெஞ்சம் வாடிப்
பேரிகை கொட்டிப் போகும்
..........பிறப்பிது பாவம் என்றே !

ஆலமே உண்டும் ஆசை
.....அகன்றிடா அன்பின் ஓசை
சீலமே சிறைதான் என்று
......சிதைத்திடும் அறிவை நின்று
தூலமே துணியாய் மாறும்
......துணிந்தவன் வாழ்க்கை தேறும்
காலமே கவிதை நண்பா!
......கருத்தெழப் பாடு தண்பா!
****************

எழுதியவர் : பாவலர் .வீ. சீராளன் (24-Aug-16, 10:09 pm)
பார்வை : 100

மேலே