காதல் சிதைவுகள்
காற்றுக் கூடக் காதல் தூதில்
கனத்துப் போகக் கண்டேன் - அதை
ஆற்றுப் படுத்த அலையும் போதில்
அங்கச் சிதைவுகள் கொண்டேன் !
காதல் இல்லா உலகம் என்றே
காட்டக் கூடுமோ சொல்லு - அதை
வேதம் என்றே விரும்பிக் கொண்டால்
விரையும் உன்மேல் கல்லு !
ஊரார் பிள்ளை ஊட்டி வளர்க்கும்
ஒப்பில் லாதார் முன்னும் - பகை
தீரார் போலும் தீஞ்சுவைக் காதலைத்
திட்டித் தீர்ப்பார் பின்னும் !
மக்கள் சேர்ந்தால் சமூகம் என்றே
மானிட வியலும் சொல்லும் - மனம்
சொக்கிப் போகக் சுவைத்தால் காதல்
சொந்தம் கூடக் கொல்லும் !
ஏழைக் காதல் என்றும் சாகும்
இதுவே நாட்டில் உண்மை - தினம்
கோழை ஆகிக் குற்றம் சுமக்கும்
குழந்தை எனிலும் பெண்மை !
சாதி என்றும் வேதம் என்றும்
சமூகம் தன்னுள் பிரிக்கும் - அதை
மோதிக் கொண்டே முளைத்தால் காதல்
மூடர் என்றே எரிக்கும் !
சுட்டும் நெஞ்சைத் துரத்தும் வலிகள்
சுகமாய் ஆக்கும் காதல் - அதைத்
திட்டம் போட்டே தீர்த்துக் கட்டின்
திண்ணம் ஆகும் சாதல் !
தேனோ அவளின் தீந்தமிழ் என்றே
திகைக்கும் காதல் சொற்கள் - பலர்
ஏனோ காதல் இழந்தால் மட்டும்
எறியத் தேடுவர் கற்கள் !
காரணம் இன்றிக் காயக் காதல்
கருவைக் கொடுப்பர் பலரும் - காதல்
வாரணம் என்றே வம்சம் சொல்லின்
வாழ்விடம் இன்றியும் மலரும் !
ஈனச் செயலே என்றே உள்ளம்
எடுத்துச் சொல்லும் நல்லார் - தம்
மானச் சுகத்தில் மகிழ்தலை மறைக்க
மறந்தும் உண்மை சொல்லார் !
பொல்லார் மனமும் பூவனம் ஆகும்
புலனுள் காதல் வந்தால் - அதைச்
சொல்லால் அடித்துச் சுட்டெரிப் பார்கள்
சமூகம் என்னும் பந்தால் !