வாழ்க்கை என்பது சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டகரமானது, நல்ல மனதுடன் இருந்தால்
" நல்லா யோசிச்சுதான் முடிவெடுத்தீங்களா?!.. "
" ஆமாங்கய்யா.. "
" இப்படி ஒரு நிலத்தை வித்தா திரும்ப வாங்கமுடியாது.. "
" அய்யா..பெத்த புள்ளைக்கு டாக்டர் சீட்டு வாங்கறதுக்கு 10 லட்சம் தேவை எங்க போறது,
இனி எங்க காலம் முடிஞ்சதுங்க எங்க ஒரே பையன் அவன் வாழ்க்கை நல்லாருக்கட்டுமுங்க"
" சரி, நாளைக்கு வாங்க இடத்தை பதிஞ்சுக்கலாம்..
ஒரே தொகையா மொத்தமா வாங்கிக்குங்க.. "
" ரொம்ப நன்றிங்கய்யா? "
கிளம்பினார் சிவலிங்கம்..
மெல்ல தோட்டத்திற்கு வந்த அவரை அவர் மனைவி முடிஞ்சுதா என்று கேட்க,
தலையாட்டினார்..சிவலிங்கம்..
" பையனுக்கு தெரியுமா?! "
" இல்ல தெரியாது சின்னப்பொண்ணு..
தெரிஞ்சா விக்க விடமாட்டான்.
நிலத்த வாங்கறவர்கிட்டயும் யாருக்கும் தெரிய வேணாம்னு சொல்லிட்டேன்..
உனக்கு எதாச்சும் கவலையா சின்னப்பொண்னு ? "
வயதான அவர் மனைவி முகத்திலிருந்து மெல்லியதாக சிரிப்பு தென்பட்டது..
" வெய்யில் தாங்கல கொஞ்சம் மோர் கொடு.. "
மோரை எடுத்து வந்த மனைவியை பக்கத்தில் அமர்த்தினார் சிவலிங்கம்..
" சின்னப்பொண்ணு..
கடன் வாங்கி விவசாயம் பண்ணுன காசெல்லாம்.. மழையில்லாம,
கிணத்துல தண்ணியில்லாம பாழ் ஆகிருச்சு, கடனை கொடுக்கனும்,
10 லட்சத்த பையனோட டாக்டர் சீட்டுக்கு கொடுத்தரலாம்..
வயசான காலத்துல உனக்கு வந்திருக்கற இருதய அடைப்புக்கு 10 லட்சம் செலவு பண்ணுனா..
நாளைக்கு பையனோட எதிர்காலம் இருண்டு போயிரும்..
அதனால பையனுக்கு தெரியாம நிலத்தை விக்கிறதையும் மறைச்சிட்டேன்..
கடன் வாங்கினதையும், உன் இருதய வியாதியையும் மறைச்சிட்டேன்,
பையன்கிட்ட பணத்தைக் கொடுத்திட்டு வந்து..
நாம ரெண்டு பேரும் ஏரிக்கரையில பூச்சிமருந்த குடிச்சரலாம் சரிதான.. "
" இவ்வளவு காலம் கழிச்சு நம்ம விரதத்துக்கு பலனா குழந்தைய கொடுத்த சிவபெருமான் கடைசி வரைக்கும் நம்மள கை விடமாட்டார்…
இப்படியெல்லாம் பேசாதீங்க "
என்றது சின்னப்பொண்ணுவின் குரல்..
" அவரைத்தான் நானும் மலை போல நம்பியிருக்கேன்… "
" ஏங்க..எனக்கு பேரன்..பேத்தியெல்லாம் பார்க்கனும்னு ஆசையா இருக்குங்க.. "
" அதுக்கு நீயும் வரம் வாங்குல..நானும் வரம் வாங்குல போல இருக்கு…
நீ இல்லாம இந்த உலகத்துல நானும் வாழ விரும்பல..
தவமாய் தவமிருந்து ரொம்ப வருஷம் கழிச்சு பிறந்த நம்ம ஒரே பையனுக்காக நாம இதை செஞ்சுதான் ஆகணும்..
வயசான காலத்துல என்னையும் பார்த்துக்கறதுக்கு யாரும் இல்ல..
இதான் நல்ல முடிவு.. " வெறுப்போடு சொன்னார் சிவலிங்கம்..
" அய்யா..அய்யா.. "
" அடடா..ராமசாமியா வாப்பா.. என்ன இவ்ளோ தூரம்? "
" அய்யா.. ரொம்ப நாளா உங்க தோட்டத்துல இருக்குற சிவலிங்கம் சும்மாவே கிடக்குது.. அத நாங்க கட்டுற கோவிலுக்கு கொடுத்தீங்கன்னா..
உங்களுக்கும் புண்ணியம், அதை பூஜிக்கிற ஊர்க்காரங்களுக்கும் புண்ணியம்..
அய்யாதான் மனசு வைக்கணும்..
இன்னைக்கு பிரதோசமுங்க
இன்னைக்கு கிடைச்சா நல்ல நாளுங்க.. "
சொல்லிமுடித்தார் ராமசாமி..
" சரி,ராமசாமி சாயங்காலம் வா.. எடுத்திட்டு போலாம்.. " தீர்க்கமாக சொன்னார்...
சிவலிங்கம்..,
" தலை முறை..தலை முறையா..நம்ம தோட்டத்துல இருந்த சிவலிங்கம்..
நல்ல காரியத்துக்குத்தான..கொடுத்திருவோம் சின்னப்பொண்ணு.. "
"சரீங்க " என்ற குரல் மறுப்பேதுமில்லாமல் சின்னப்பொன்னுவிடமிருந்து வந்தது..
"அந்த, கடப்பாரை எடுத்திட்டு வா.. "
கிணத்து மேட்டருகில் பூவரச மரத்திற்கு கீழே அழகாக பீடத்தில் அமர்ந்திருந்த சிவலிங்கத்தை வெளியெடுக்க இடிக்க தொடங்கினார் விவசாயி சிவலிங்கம்..
" ரொம்ப கஷ்டமா இருக்கு கீழ நல்லா பூசியிருக்காங்க.. "
" பார்த்து கவனமா எடுங்க..
நம்ம ஊர்க்காரங்க எல்லோரும் வணங்கபோறாங்க.. "
" ம்ம்..சரி..சரி..இந்தா கடப்பாறைய புடி.. "
மெல்ல..சிவலிங்கத்தை நகர்த்தினார் விவசாயி..
ம்ம்..மெல்ல..மெல்ல..
அப்பா..ஒரு வழியா எடுத்தாச்சு..
சின்னப் பொண்ணு..
" ஏங்க..சிலைக்கு கீழ பாருங்க ஒரு பெரிய மண்பானை தெரியுது.. "
ஆச்சரியத்தில் இருவரின் கண்களும் விரிந்தது..
அந்த மண்பானையை மெல்ல எடுத்தார் சிவலிங்கம்..
" இந்தா இதை அங்க இருக்கற மோட்டார் ரூமுக்கு கொண்டு போ வர்றேன்.. "
மோட்டார் ரூமில் மெல்ல பானையை திறந்தார் சிவலிங்கம்..
உள்ளே, விலை மதிக்கமுடியாத வைர ஆபரணங்களும்..தங்க காசுகளும் நிறைந்து வழிந்தன..
பேச்சு எதுவும் வராமல் நின்றனர்,
சிவலிங்கமும்..சின்னப்பொண்ணும்..
வாய் பேசமுடியாமல் நின்றிருந்த சின்னப் பொன்னுவை பார்த்தார் சிவலிங்கம்..
" என்னங்க "என்ற வார்த்தைக்கு மேல்..
எதுவும் பேச முடியவில்லை சின்னப்பொன்னுவிற்க்கு..
" சின்னப்பொண்ணு..
எங்க தாத்தா சாகறப்ப சிவலிங்கம்..சிவலிங்கம்னு கூப்பிட்டாரு..
பேரனைத்தான் கேட்கராருன்னு எங்கப்பா என்னை கூட்டிட்டு போய் அவரு முன்னாடி நிருத்தினாரு.. ஆனா, அவரு கைய கிணத்து மேட்டுப்பக்கம் காண்பிச்சாரு.. அப்படியே உயிர் போயிருச்சு.
ஒருவேளை இதை பத்திதான் சொல்ல கூப்பிட்டு இருப்பாரோ..
இருக்கலாங்க. "
எச்சிலை விழுங்கிக் கொண்டே வந்தது சின்னப்பொண்ணுவின் குரல்..
" சரி…இந்தா இந்த துண்டைப்போட்டு இதை வீட்டுக்கு எடுத்திட்டு முன்னாடி நீ போ சின்னப்பொன்னு... பின்னாடியே வாரேன்...
ஏன் சின்னப்பொன்னு சிலைய எடுத்திட்டு போறேன்னு சொன்ன ராமசாமியை இன்னும் காணாமே..
இவ்வளவு நேரமாகியும் வரலையே.."
சிவலிங்கம் அங்கலாய்த்தார்.
" எதுக்கும் நீங்க ஒரு பார்வை பார்த்திட்டு வந்திருங்க, ராமசாமி அடுத்த தெருவு தான…" சின்னப் பொன்னு சொல்ல… கிளம்பினார் சிவலிங்கம்..
ராமசாமி வீடு இதுதானே? ஏன் பூட்டியிருக்கு?
அவரு, காசிக்கு போய் ஒருவாரம் ஆகுதுங்க இன்னும் வரலை…
பக்கத்து வீட்டுக்காரின் குரல் கேட்க, அதிர்ந்தார் சிவலிங்கம்…
' அப்ப வீட்டுக்கு வந்தது யாரு, ' சிந்தனையோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் சிவலிங்கம்..
ஊருக்கு வரும் 6 மணி பஸ்ஸில் இறங்கி கொண்டிருந்தது ராமசாமியின் குடும்பம்..
சிவலிங்கம் அசைவில்லாமல் அதை பார்த்துக்கொண்டிருக்க…
பஸ்ஸிலிருந்து இறங்கிய ராமசாமி சிவலிங்கத்தைப் பார்த்து வேகமாக அருகில்
வந்தார்…
" அய்யா, வணக்கம் இப்பதான் காசியாத்திரை போய்ட்டு ஊர் வந்து இறங்குறேன், நீங்க தப்பா நினைக்கலேன்னா, நம்ம தோட்டத்தில பராமரிப்பில்லாம இருக்கற சிவலிங்கத்தை புதுசா கட்டுற கோயிலுக்கு கொடுத்தீங்கன்னா நாம எல்லாரும் நல்லாருப்போம்… "
சொல்ல..சொல்ல..
ராமசாமியை எந்தவொரு அசைவில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்
சிவலிங்கம்…