பசலைக் காலம்
வெற்றிலையின்
நடு நரம்பென
நீண்டு விரிகிறது
நீ விலகிய தனிமை.
இந்தக் கணத்தில்...
நான் மென்று கொண்டிருக்கும்
மொழியில்...
சொற்களின் அலகு சிறுத்து
கேவல்களாகிவிட....
உன் அலட்சியத்தை
ஒளித்து வைக்கிறேன்
என் மனதின் புதர்ச் செடியொன்றில்.
அதிலிருந்து
ஊ ற்றெனப் பெருகுகிறது
உனது ஆதி அன்பின்
நமுட்டு வாய்க்கால்கள்.
இதம் நிறைந்து பரவுகையில்
தீயின் கங்குகளாகி
ரணமாகிறது
என் நினைவின் உள்ளாழங்கள்.
நீளும் அன்பின் நதியில்...
கோபத்தின் புறத்தோல்
கழன்றுவிட...
தனித்த பசலையில்...
உனது வாசனையோடு
துவங்குகிறது
எனக்கேயான மழைக்காலம்.