மனதின் வலி
உற்றதுணை யாயிருந்தாய் ஊர்மெச்சப் பேரெடுத்தாய்
பெற்றதனால் பெருமைகொண்டேன் பிரிந்தாயே நொறுங்கிவிட்டேன்
வெற்றுடலை விட்டுவிட்டு வியனுலகம் சென்றாயோ
பற்றறுத்துப் பறந்தனையோ பரிதவித்துப் போனேனே !
முந்திக்கொண் டோடிவிட்டாய் மூப்புவரு முன்னேநீ
முந்தைவினைப் பயனிதுவோ முழிபிதுங்கித் தவிக்கின்றேன்
வெந்தணலும் சுட்டதுவோ வேதனையும் கூடிடுதே
செந்நீரும் கசிகிறதே செத்திடவே தோன்றிடுதே !
ஊற்றாகப் பெருக்கெடுக்கும் உள்ளத்தில் உன்நினைவை
மாற்றிடவே முடியாமல் மனம்வெதும்பி அழுகின்றேன்
தேற்றிடவும் நீயின்றி தெய்வத்தைத் துணைக்கழைத்தேன்
கூற்றுவரும் வழிபார்த்துக் கும்பிட்டுக் கிடக்கின்றேன் !
சவமான தென்னிதயம், தாயிருக்க மகன்போன
அவலநிலை ஏன்தந்தாய்? அன்னைமனம் வெடித்ததைநீ
உவகையுடன் ரசித்தாயோ? உன்மனமும் துடிக்கலையோ?
கவலைகளைத் தினம்மறக்கக் கண்ணீரில் கவிவடிப்பேன் !
தினமுமுண்டு துயின்றாலும் தேடுகின்றேன் உன்றனையே
கனக்கின்ற நினைவுளைக் காடுவரை சுமந்திடுவேன்
மனவலியை யாரறிவார் மனவலிமைக் குன்றியதே
கனவிலேனும் காட்சிகொடு கடவுளெனக் கைதொழுவேன் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
