கண்டதெல்லாம் கவிதைக்கு கருப்பொருளே
வரமறந்த வான்மழை துறவறம் போனதாய்
வாய்க்கால் தவளைகள் வாய்மொழியக் கண்டேன்...
மலரமறுத்த செந்தாமரை உயிரிழந்து கருகிப்போனதாய்
காலதேவன் கைகொண்ட அரளி அழுதிடக் கண்டேன்...
பறந்துவந்த காதலியின் முதல்முத்தம் வரும்பாதை
பருந்தொன்று பாதிவழி கவ்விக்கொண்டு போகக் கண்டேன்...
நாளும்தேயும் நறுமுகையை காணமுடியாது
ஆளும் ஆதவனே தொழுதிடக் கண்டேன்...
குட்டையினில் சிலையாகிப்போன ஒற்றைக்கால் கொக்கு
வேட்டைக்காரனின் வேட்டிற்குசிக்கி உயிர்மடியக் கண்டேன்...
புதியதாய் பூவரசங்காட்டில் சட்டெனமலர்ந்த எல்லைக் கற்கள் விலையாகி
நிலைகொண்ட அடுக்குமாடிக் கட்டிடங்களாய் அவதரிக்கக் கண்டேன்...
வழக்கமான என்பயணத்தில் இனக்கமின்றி ஒளிந்துகொள்கிறது கைப்பேசி
பழக்கமான சில பேருந்து பயணிகளின் பார்வையிலிருந்து...
#கண்டதெல்லாம்_உருப்பெருக்கும்_கருப்பொருளே