நினைவுகளை சேகரிக்கிறேன்- குமார் பாலகிருஷ்ணன்

இந்த நான்கு ஆண்டுகளாய் சேகரித்த நினைவுகளை
என் கைகளில் தவழவிட்டபடி,
புதிதாய் பிறந்த ஒரு மழலையின் உதட்டை கடன்வாங்கி சில முத்தங்கள் வைத்து நிமிர்ந்தேன்.

என் முகமெங்கும் ஆயிரம் முத்தங்களை
ஒட்டிச் சென்றிருந்தது என் நினைவுகள்!

பிசுபிசுப்பு அதிகமாக இருக்கும் இந்த முத்தத்தின் சுவடு
என் முதல் காதலினுடையதாய் இருக்கக்கூடும்!

எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்த அந்த இனிப்பு முத்தங்கள்
எங்கள் கல்விச் சுற்றுலாவுடையதுதான்!

என் விடுதி அறைகளும்,
குட்டித் திண்ணைகளும்
சின்ன சின்னதாய் நிறைய
அழுத்தமான முத்தங்களை செய்திருந்தது!

கொஞ்சம் உப்புச்சுவை படிந்திருந்த அந்த முத்தத்தை, நாங்கள் எப்போதும் இளைப்பாறும் புளிய மரங்கள் கண்ணீர் வடிய வைத்திருக்கலாம்!

நாங்கள் சண்டையிட்டபடி தலைவாறும் அந்த கண்ணாடியும் சீப்பும்
சில முத்த பிம்பங்களை தலைகீழாய் உதிர்த்திருந்தது!

முதலாவதாய் முத்தமிட்டது என்
கடைசி பென்ஞ்சுகளாகத்தான் இருக்கும்!

செய்யாத அசைன்மென்டுகளும்
சொல்ல முடியாத காதல்களும் பதித்த முத்தங்களின் ஈரம் இன்னும் காயவே இல்லை!

உடன்பிறவா சகோதரர்களுடையதும்
உயிர்கொடுக்கும் நண்பர்களின் நினைவுகளும் இட்ட சிறப்பு முத்தங்கள் சிரித்தபடியே என்னை அழவைத்து விடுகின்றன!

இந்த நினைவுகள் தந்த முத்தங்களே போதும்!
என் ஜீவன் ஒரு நூறாண்டு வாழும்!

எழுதியவர் : குமார் (31-Oct-16, 2:16 am)
பார்வை : 310

மேலே