இரு தலைவர்கள் மோடியும் ட்ரம்பும்

ட்ரம்புக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நல்ல இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு

சான்பிரான்சிஸ்கோவில் இன்னும் மக்களின் கொதிப்பு ஆறவில்லை. இன்று ஒரு பெண்ணைச் சந்தித்தேன். நான் முதன்முதலாகப் பார்த்த, குரலை உயர்த்திப் பேசும் அமெரிக்கப் பெண். பூசணிக்காய் ஒன்றைப் பக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தார்.

‘முழுவதும் அழுகியது - ட்ரம்ப்’ என்று அதில் எழுதியிருந்தது. “அமெரிக்கா உடைகிறது” என்று சொன்னார். “நான் சொந்தச் செலவில் ஃப்ளோரிடா சென்றேன். 300 வீடுகளில் கதவுகளைத் தட்டி ஹிலாரிக்கு ஓட்டுப் போடுங்கள் என்றேன். எல்லோரும் ட்ரம்புக்கு எதிராகத்தான் இருந்தார்கள். ஏதோ நடந்திருக்கிறது” என்றார். ஃப்ளோரிடா அமெரிக்காவின் கிழக்கில் இருக்கிறது. இங்கிருந்து 5,000 கிலோ மீட்டர்கள். “அவர் நியாயமாக வெற்றி பெற்றிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்” என்றேன். பிடிவாதமாக “இல்லவே இல்லை” என்றார் அந்தப் பெண்.

எனக்கு உடனே மோடியின் வெற்றி நினைவுக்கு வந்தது. எனது இந்துத்துவ நண்பர்கள் இரண்டு ஆண்டுகளில் இரண்டு மகத்தான வெற்றிகள் என்கிறார்கள். இவரைப் போலவே அவரும் மக்களை இரு துருவங்களில் நிற்கவைத்தவர். மோடி வென்றவுடன் பொங்கி எழுந்த பல நண்பர்களை எனக்குத் தெரியும். இன்று வரை பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் நமது பிரதமர் என்பதையே ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். அமெரிக்காவிலும் கோபம் அவ்வளவு சீக்கிரம் அடங்கும் என்று தோன்றவில்லை. மற்றொரு ஒற்றுமை இருவரும் நாடு அபாய நிலையில் இருக்கிறது என்று குரல்கொடுத்து, அதை மக்கள் நம்பியதால் வெற்றிபெற்றவர்கள். ஆனால், மோடி அடிமட்டத்திலிருந்து வந்தவர். அரசியலில் ஊறியவர். ஒரு பெரிய மாநிலத்தில் பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர். ட்ரம்ப் உலகத்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அரசியல் அனுபவம் இல்லாதவர். மோடி நிச்சயம் வெற்றிபெறுவார் என்று நம்மில் பலருக்குத் தெரிந்திருந்தது. தனது வெற்றியைப் பற்றி ட்ரம்புக்கே சந்தேகம் இருந்தது.

மோடியும் ஒபாமாவும்

மோடி, ஒபாமா ஈருயிர் ஓருடல் என்று மோடி பக்தர்கள் நம்புகிறார்கள். இருவருக்கும் அவ்வளவு இணக்கம் இருப்பதால் இந்தியா என்ன கேட்டாலும் அது கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தகோடிகளுக்கு இருந்தது. ஆனால், உண்மையின் நிறம் வேறு. இந்தியாவின் பிரச்சினைகள் மீது, குறிப்பாக இந்திய - பாகிஸ்தான் உரசல்கள் மீது, ஒபாமா அதிக அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானோடு சீனா நெருக்கமான உறவுகளை வைத்துக்கொள்வதை அதிகத் தடைகள் ஏதும் போடாமல் பார்த்துக்கொண்டிருந்த ஒபாமாவின் நிர்வாகம், இந்தியா தெற்காசியாவில் தனது நிலையை வலுவாக்கிக்கொள்வதை விரும்பியதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகச் சில அறிக்கைகள் வந்தனவே தவிர, பாகிஸ்தானைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் ஒபாமா எடுக்கவில்லை. எனவே, அவர் மோடியின் நெருங்கிய நண்பராக இருந்தாலும், இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்று சொல்ல முடியாது.

சீனச் சிக்கல்

கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 50 லட்சம் வேலைகள் - கிட்டத்தட்ட எல்லாம் தொழில் உற்பத்தியைச் சார்ந்தவை - வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கின்றன. இவற்றில் 80%-க்கு மேல் சீனாவுக்குத்தான் சென்றிருக்கும். இந்த வேலைகளைத் திரும்பிப் பெற ட்ரம்ப் நிச்சயம் முயற்சிப்பார். அந்த வாக்குறுதியில்தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். சீன - அமெரிக்க வர்த்தகத்தில் உபரி வருமானம் சீனாவுக்குத்தான். ஆண்டுக்குச் சுமார் 370 பில்லியன் டாலர்கள். இதை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைக்க ட்ரம்ப் முயற்சி செய்வார். இந்தியாவைப் பொறுத்தவரை அதற்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதால் கிடைக்கும் உபரி வருமானம் சுமார் 2 பில்லியன் டாலர்கள்தான். (ஏற்றுமதி 4 பில்லியன் டாலர்கள்: இறக்குமதி 2 பில்லியன் டாலர்கள்). அதாவது, சீனாவுக்குக் கிடைக்கும் உபரி வருமானத்தில் 180-ல் ஒரு பங்குக்கும் குறைவு. எனவே, ட்ரம்பின் பார்வை சீனா மீதுதான் விழும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

இந்தியாவில் இருக்கும் வேலைகள் அமெரிக்காவுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று சொல்லலாம். அப்படிச் சென்றாலும், அவை குடியரசுக் கட்சிக்கு ஓட்டு போட்டவர்களுக்குச் செல்லும் வாய்ப்புகளும் மிகக் குறைவு. எனவே, மோடி முதலில் செய்ய வேண்டியது ட்ரம்பின் பார்வை இந்தியா மீது படுவதை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்த வேண்டுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியதுதான். அமெரிக்காவில் இருக்கும் சில மோடி ஆதரவாளர்கள் ட்ரம்புக்கு நெருக்கமானவர்கள். குறிப்பாக, ட்ரம்ப் தேர்தலுக்குக் கணிசமான நிதிஉதவி செய்த ஷலப் குமார், மோடிதான் தனக்கு ஆதர்ச புருஷர் என்று சொன்னவர். ட்ரம்ப் தேர்தலை நிர்வகித்து நடத்தியவரான ஸ்டீஃபன் பெனான் மோடியை இந்தியாவின் ரொனால்டு ரீகன் என்று அழைத்தவர். இருவரையும் மோடி பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து வேலைகள் அமெரிக்காவுக்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ட்ரம்ப் பாகிஸ்தானில் பிறந்தார் என்ற வதந்தி உலவினாலும் அவருக்கும் பாகிஸ்தானுக்கும் நல்ல இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. அதை இன்னும் குறைவாக்குவதற்கான முயற்சிகளை இந்தியா எடுக்க வேண்டும். குறிப்பாக, பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் மீது அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பாகிஸ்தான் தயாரிக்கும் ‘சிறு’அணு ஆயுதங்கள் உலகத்தின் பாதுகாப்புக்கே எமனாக ஆகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை ட்ரம் புக்குப் புரிய வைக்க வேண்டும். ட்ரம்ப் காஷ்மீர் பிரச்சினை யைத் தீர்த்துவைத்தால், அவருக்கு நோபல் பரிசு கொடுக் கலாம் என்று பாகிஸ்தானின் முக்கியப் புள்ளி ஒருவர் கூறியிருக்கிறார். காஷ்மீரில் மூன்றாவது நாடு தலையிடு வது பிரச்சினைகளைப் பெரிதாக்குமே தவிர, தீர்க்காது என்பதையும் அவருக்குச் சொல்ல வேண்டும். தாமதப் படுத்தாமல் விரைவாக மோடி இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ட்ரம்பிடம் கோட்டை விட்டுவிடக் கூடாது.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்

எழுதியவர் : (17-Nov-16, 3:39 pm)
பார்வை : 171

மேலே