நினைத்தேன் வந்தாய்

நினைத்தேன் வந்தாய்..!
நிலவு பூமிக்கருகில் வந்தாலும்
நெடுந்தொலைவு சென்றாலும்
அதில் நீ தெரிவதில்
மாற்றம் இருந்ததில்லை
அமாவாசையிலும் நிலவிருப்பதாய்..!
தோட்டப் பூக்கள்
முல்லை மல்லி ரோசா
என்கிற வரிசையில்
வரிசை கட்டி நிற்கிறாய்
நீயே ஒவ்வொன்றிலும்
பூக்கள் உதிர்ந்துவிடாமல்..!
யாரோ புத்தகம் பரிசளிக்கிறார்கள்
அட்டைப் படத்தில் நீதான்..!
புரட்டிப் படிக்கிறேன்
எழுத்து எழுத்தாய் அர்த்தமுடன் நீ..!
தட்டிலிட்ட உணவில்
அப்படி என்ன சிரிப்பு உனக்கு..?
அள்ளி எடுத்த கையில் வருகிறாய்
நான் எப்படி உண்பது..?
விழிகளை மூடினால்
காட்சி மறையும் என்று யார் கூறியது..?
நீயே தெரிகிறாய் என்று
நான் யாரிடம் சொல்வது..?
கனவின்போது உன் பெயரை
உச்சரித்ததாய் கூறுகிறார்கள்
யார் என்று கேட்கிறார்கள்
நான் அவர்களுக்கு
என்ன பதில் சொல்வது..?
"நினைத்தேன் வந்தாய்"
என்று சொல்வதற்கில்லை
மறந்தால்தானே நினைப்பதற்கு..!