உள்ளம்​ எட்டிப் பார்க்கிறது ​

ஒருபிடி சோற்றுக்கே வழியிலா
ஒற்றைநாடி உயிர்கள் போராடுது
கட்டுகளாய் பணத்தை அடுக்கி
மெத்தையாய் கொண்டு படுக்குது
உழைக்காமல் பிழைக்கும் கூட்டம் !

வரிசையில் நிற்கும் வறியோருக்கு
இல்லை அரிசியென உரைத்தவனே
கள்ளத்தனமாய் விற்கும் நிலையும்
பதுக்கி வைப்பவன் பாதுகாப்புடன்
பக்கத்து மாநிலத்திற்கு அனுப்பிடும்
அவலக்காட்சி அரங்கேறுது நாளும் !

நோட்டைக் கொடுத்து ஓட்டும் வாங்கி
வழங்கும் வாக்காளர் வாய்க்கு அரிசியும்
இல்லாமல் தவிக்கும் மயான பூமியிது !
ஏய்த்தே வாழும் கூட்டத்தின் ஆதிக்கம்
ஏமாளியாய் ஆக்குது ஏழை பாழைகளை !

சொந்தப் பணமோ செல்லாக் காசாகுது
பந்தப் பாசமோ கல்வெட்டுக் காலமாகுது
சேர்ந்து வாழ்ந்ததோ அறுந்த பட்டமாகுது
கல்விக் கூடமோ விற்பனை நிலையமாகுது
அரசியல் களமோ ஆபத்தை உருவாக்குது
எட்டிப் பார்க்கிற உள்ளங்கள் அழுகிறது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Dec-16, 6:52 am)
பார்வை : 212

மேலே