விபத்திலிருந்து என்ன பாடம் கற்கிறோம் ---, ரயில் பயணிகள்,--- ரயில்வே அமைச்சகம் ----- நம் சிந்தனைக்கு
ஓர் ஆண்டுக்கு 700 கோடிப் பயணிகளைக் கையாளும் இந்திய ரயில்வே அசாதாரணமான சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. ரயில் பயணிகள் அரசிடம் முதலில் எதிர்பார்ப்பது மிகவும் பாதுகாப்பான பயணத்தைத் தான். இந்தூர் - பாட்னா விரைவு ரயில் கான்பூர் அருகில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவ்விதம் அடிக்கடி நிகழும் ரயில் விபத்துகளில் ஏராளமான பயணிகள் உயிரிழப்பதும் நிரந்தரமாக ஊனம் அடைவதும் அந்தந்தக் குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், தேசத்துக்கும் பேரிழப்பாகும்.
ஒவ்வொரு விபத்துக்குப் பிறகும், விசாரணைக்கு உத்தரவிடுவதும் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும்தான் சம்பிரதாயமாக நடக்கிறதே தவிர, விபத்தில்லா பயணத்தை உறுதிசெய்ய அக்கறை காட்டப்படுவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுக்கு 50 தடம்புரளும் விபத்துகள் நடக்கின்றன. ஓராண்டில் அதிகபட்சமாக 63 முறை ரயில்கள் தடம்புரண்டுள்ளன. இனி இப்படி நடைபெறாதபடிக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி, மக்களுடைய நம்பிக்கையை ரயில்வே துறை மீட்க வேண்டும். பாதுகாப்பு என்ற அம்சத்துக்குப் பல உட்கூறுகள் உள்ளன. அது ரயில் தண்டவாளங்களில் தொடங்கி ரயில்வே துறையின் நிர்வாகம் வரை நீள்வது.
இந்தியாவில் நடக்கும் ரயில் விபத்துகளில் 70% மனிதத் தவறுகளால்தான் நடக்கின்றன. இந்திய ரயில்வேயில் நிலவும் காலிப் பணியிடங்கள் தொடர்பில் ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்பை மேம்படுத்த ஊழியர்களுக்கான பயிற்சிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மேலதிக நவீன பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் யோசிக்க வேண்டும். ரயில் பயணப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வகையில் ‘சட்டபூர்வப் பாதுகாப்பு ஆணைய’த்தை ஏற்படுத்துவது, அதிக ஆண்டுகள் பயன்படுத்திவிட்ட ரயில் பெட்டிகளைச் சேவையிலிருந்து நீக்குவது, நவீன எல்.எச்.பி. வடிவமைப்பிலான ரயில் பெட்டிகளுக்கு மாறுவது, ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விரிசல்கள் உள்ளிட்ட குறைகளைக் கண்டறியும் நவீன கருவிகளை 2017 மார்ச்சுக்குள் எல்லா மண்டலங்களிலும் பயன்படுத்த அளிப்பது என ஏராளமான நடவடிக்கைகள் ஏற்கெனவே பேசப்பட்டவை செயல்பாட்டுக்குக் காத்திருக்கின்றன.
இந்திய ரயில்வேயின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஏற்கெனவே பல அறிக்கைகள் ரயில்வே துறையின் மேஜைகளில் தூங்குகின்றன. பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து அனில் ககோட்கர் குழு அளித்த அறிக்கையும் ரயில்வே துறையின் நவீனமாக்கல் தொடர்பில் விவேக் தேவராய் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களையும் முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் தன் உச்ச உயரத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் நாட்களிலும் இப்படியான விபத்துகள் சகஜமெனத் தொடர்வது இழிவு. தவறுகளிலிருந்து பாடம் கற்றுள்ளோம், இனி இப்படிப்பட்ட தவறுகள் நிகழாது என்ற நம்பிக்கையை ரயில்வே துறை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்!