ஆளப் பிறந்தவனே

பொத்தி வைத்தேன் இத்தனை நாள்
முத்து போல பத்திரமாய்
போய்வா மகனே
போய்வா ...!
தேன்துளி சுவையாக சேர்ந்திருந்தாய்
என்னுடனே நீயிருந்த நாட்களெல்லாம்
பொக்கிஷமே பூந்தளிரே
போய்வா மகனே
போய்வா...!
சேர்த்து வைத்த ஆசையெல்லாம்
கோர்த்து வைத்தேன் உனக்குள்ளே
என் மகனே மகராசா
போய்வா மகனே
போய்வா...!
எத்தனை நாள் தவம் கிடந்தேன்
உன்னழகை காண வேண்டி
பச்சைமுகம் பிஞ்சு மேனி
எண்ணுருவே கண்ணழகே
போய்வா மகனே
போய்வா...!
அன்னமிட்ட கைகளுக்கு
அழகு முத்தம் தந்தவனே
உன்னைவிட சொந்தமென
என்னிடத்தில் யாருமில்லை - பத்திரமாய்
போய்வா மகனே
போய்வா...!
கால் முளைத்த கம்பீர
தமிழன் இந்த மண்ணிலே
நான் பெற்ற செல்வமே
தரணி போற்ற தைரியமாய்
போய்வா மகனே
போய்வா...!
விண்ணுலம் வியக்கும் வண்ணம்
மண்ணுலகில் வாழவேண்டும்
பெருமை பெற்று பெயர்விளங்கி
நீதியோடு நீ வாழ
போய்வா மகனே
போய்வா...!
எத்தனைபேர் ஏழ்மையுடன்
உன் வரவை வேண்டி நிற்க
ஆசை துறந்து ஆள வேண்டும்
அன்பு கொண்டு மன்னவனே
போய்வா மகனே
போய்வா...!
உன் உயிரில் சேதம் ஒன்று
கண்டபின்னும் மறவாதே
ஏழை உந்தன் மக்களடா
கடமை உயிரைவிட பெரியதடா
போய்வா மகனே
போய்வா...!
ஆசை கோபம் மது மங்கை
அனைத்தையுமே எரித்துவிடு தீயிலிட்டு
கடவுள் என்று ஒருவனை நீ
தேடவேண்டாம் கோயிலில்
போய்வா மகனே
போய்வா...!
உறக்கத்திலும் உன் நினைவில் கூடாது
எந்நிலை வந்தாலும் தன்னிலை தேடாது
எளிமை தனை விடுத்து மாறாதே - அது
மனதின் விழிகளை மறைத்துவிடும் நீ
மாறாத மனம் கொண்டு
போய்வா மகனே
போய்வா...!
- கலைவாணன்