யாரந்த உத்தமர்

மனித இனம் கடந்தே முல்லைக்குத் தேரீந்த கொடைவள்ளல்,
கிபி 2016 ஆம் ஆண்டின் இறுதியில்
உலகம் காண ஆசைப்பட்டு,
எல்லாம்வல்ல கடவுளிடம்
மனு ஒன்றை மாண்போடு கொடுத்தார்..
மனுவைப் படித்த கடவுள், பாரியை நோக்கி, " மாண்புமிகு கொடைவள்ளல் பெருமானே! நீங்கள் வாழ்ந்த உலகமல்ல இன்று இருக்கும் நீங்கள் காண விருப்பும் இந்த உலகம்.
அதைக் கண்டால் உங்கள் உள்ளம் பெரும் துயருறும். " , என்றார்..

" துன்பம் கண்டு நானஞ்சேன் பரம்பொருளே. என்னை அனுப்பி வையுங்கள். ", என்றார்..

சரியென்று கடவுளும் வள்ளல் பாரிக்கொரு மனித உருவ உடல் கொடுத்து, நினைத்த இடத்திற்குச் செல்லும் வரம் தந்து அனுப்பி வைத்தார்..

பார் போற்றிய வள்ளல் பாரி, பார் காணப் புறப்பட்டார்..
அன்று அரசனாக தங்க ரதத்தில் உலா வந்தவர் இன்று வெறும் காலில் நடந்து வந்தார்...

மலைவளம் காண , இமயம் முதல் அனைத்து மலைவளங்களையும் கண்டு, கண் கலங்கியே போனார்..
கண்ணில் கண்ட தரிசு நிலங்கள் கண்டு கதறி அழுதார்..

முன்பு அடர்ந்த காடுகளாய் இருந்த பகுதிகளெல்லாம், இன்று திறந்தவெளியாய் இருப்பதைக் கண்டு உள்ளம் பதைபதைத்தார்...

சிறப்பு மிகு பாவலர்களைக் கண்டிருந்த வள்ளல் பாரி, காமம் போற்றும் கவிஞர்களைக் கண்டே கண்ணீர் சிந்தினார்..

ஆப்பிரிக்கா கண்டம் சென்றார்.
பசியால் வாடுவோரைக் கண்டார்.
இறைவனை வேண்டினார்..

நைஜீரியா நாட்டை அடைந்தார்..
முஸ்லீம், கிறிஸ்டின் சண்டை கண்டே பெரும் துயருற்றார்..

அமெரிக்கா உட்பட பல மேலைநாடுகளைச் சுற்றித் திரிந்தார்..
தவறான
கலாச்சாரம், பண்பாடென்ற அழிவுப்பாதையில் அந்நாடுகள் பயணிப்பதையும், பக்கத்து நாடுகளுக்குள் பகைமையோடு இருப்பதையும் கண்டு உலகை வெறுத்தார்...

ஆசிய கண்டம் வந்தார்..
இந்தியா, பாகிஸ்தான் எல்லைத் தகராறு கண்டார்..
இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையேயான விரோதம் கண்டார்..
அதோடு இல்லாமல் இயற்கையை தனது ஆளுமையால் அடக்கி,
தனக்கென்று பதுக்கிக் கொண்டிருந்த வீணர்களைக் கண்டார்...

எப்படி இருந்த
உலகம் இப்படி மாறிவிட்டதென்றே மனக்கவலை கொண்டார்..

அவை மட்டுமா?

சாதி, மதமென்னும் பிரிவினை கண்டார்..
மொழி வேற்றுமையால் கொண்ட வெறித்தனம் கண்டார்..

ஆண்,பெண் சமமென்றுரைக்கும் வாய்ச் சொல் வீரர்கள் பலரைக் கண்டார்..
பெண்கள் ஆண்களால் கொலை, கற்பழிப்பு என துன்பப்படுவதைக் கண்டார்..
மனித சமுதாயத்தால் உலகம் இப்படி மாறிவிட்டதே என்று நினைக்கையில்,
இக்கொடுங்செயல்கள் அனைத்திற்கும் எதிராகப் போராடும் உத்தமர்கள் சிலரைக் கண்டார்..
மகிழ்ச்சி கொண்டார் பாரி வள்ளல்...

அவ்வுத்தமர்களுள் ஒருவர் மட்டும் தன்னையொத்த குணங்களோடு போராடுவதைக் கண்டார்..
பேரானந்தம் கொண்டார்...
அந்த மானிடரின் புரட்சி மிகுவரிகள் கண்டே உள்ளம் அமைதி கொண்டார்...

அவ்வேளையில் அந்த உத்தமர் நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுடுவதைக் கண்டார்..
சட்டென குறுக்கே சென்று, உலகம் நலம் பெற உழைத்திடும் உத்தமரைக்காக்க தன்னுயிர் ஈந்தார் மகிழ்ச்சியாக..

இறைவன் அளித்த உடலைப் பிரித்தே இறைவனிடம் வந்த பாரி வள்ளலிடம், இறைவன், " என்ன வள்ளல் பெருமானே! கொடிய உலகம் கண்டு கலங்கிய நீர் மகிழ்ச்சியாய் திரும்பி வருகிறீர்களே.. ", என்றார் ஏதுமறியாக் குழந்தைப் போல்...

அதற்குப் பாரி வள்ளல், " நீர் அறியாத காரணமா ஆண்டவா??..
உலகம் அதர்மப் பிடியில் சிக்கித் தவிப்பது கண்டு வருந்தினேன். ஆனால் அதே உலகில்
அந்த அதர்மங்களை எதிர்த்து தர்மமென்னும் அஷ்திரமேந்தி போராடும் உத்தமர்களைக் கண்டேன். கவலை மறந்தேன்..
மீண்டும் இவ்வுலகம் சீரமைக்கப்பாடும்..
சிறு விதையானது விருட்சமாய் வளருவது நிச்சயம். அவ்விருட்சம் எத்தன்மையுடையதாக இருக்க வேண்டுமென்பதை விதையின் பண்புகளே தீர்மானிக்கின்றன..
எனக்கு நம்பிக்கை உள்ளது இறைவா..
நீ அதர்மத்திற்கு துணை நிற்கமாட்டாயென்று... ", என்று இறைவனைப் பணிந்தே தன் ஆசனம் சென்று அமர்ந்தார்...

" யாரந்த உத்தமர்? ", என்ற கேள்வியை தங்களின் சிந்தனைக்கு உணவாக்கி, இச்சிறுகதை முற்றுபெறுகிறது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Dec-16, 9:04 pm)
பார்வை : 516

மேலே