எசப்பாட்டு - 09 கையிலுள்ள காசு வெச்சு
எசப்பாட்டு - 09
கையிலுள்ள காசு வெச்சு
பஸ்ஸேரிப் போகாம
கால்நடையா போகிறியே
கால்வலிச்சா என்னெசெய்வே
ராசாத்தி என் ராசாத்தி
சித்த நேரம் ஓரிடத்தில்
ஒக்காந்து ஓய்வெடுத்து
ஒரு சொம்பு நீர்குடிச்சு
மிச்ச தூரம் நடந்திடுவேன்
ராசாவே என் ராசாவே
பெத்தபுள்ள மீதுவுள்ள
அன்பு இன்னும் தீரலையே
எட்டு மைலுக்காப்பாலே
இருக்கான் உன் பேரப்புள்ள
வெய்யிலென்னும் பாக்காம
வேகமாகப் போகிறியே
கையிலுள்ள காச வெச்சு
என்ன செய்யப்போறே நீ
ராசாத்தி என் ராசாத்தி
கையிலுள்ள காச வெச்சு
பொம்மை ஒன்னு வாங்கப்போறேன்
பேரனுக்கு கொடுக்க போறேன்
ராசாவே என் ராசாவே
(முதியவர் இருவரும் மகன் வீடு சென்றடைய வீடு பூட்டியிருக்க, இருவரும் இல்லம் திரும்பு கின்றனர் பொம்மையை வீடு வாசலில் வைத்து விட்டு)
ஊரில்மவன் இல்லாட்டா
என்னெ செய்யப்போறே நீ
வாரேன்னு சொல்லீட்டு
போலாம்ன்னு சொன்னேனே
கேட்டீயா நீ கேட்டீயா
கையில் காசு இல்லாம
பஸ்ஸேர முடியாம கால்நடையா போகிறியே
கால்வலிச்சா என்னெசெய்வே
ராசாத்தி என் ராசாத்தி
உனக்கு நானும் எனக்கு நீயும்
இருக்கையிலே பயமெதுக்கு
வீடு போயி வென்னீரு
ஒத்தடம் நீ போட்டுத்தாரே
ராசாவே என் ராசாவே
- தர்மராஜன் வெங்கடாச்சலம்
28-12-2016