தூசுதட்டிய தோல்விகள்

அடி பெண்ணே...!
நான் தோல்விகளைக் கண்டு தளர்பவனல்ல
அந்தத் தோல்விகளைத் துரத்தி வேட்டையாடுபவன் நான்...
என் தோல்விகளைக் கணக்கிட
உன் கை விரல்கள் விளையாடும் கணிணியினால் மட்டுமே முடியும்...
ஒன்றிரண்டைச் சொல்கிறேன்
உதாசீனப்படுத்தாமல் உற்றுக்கேள்...
அன்று என் அகவை பத்து...
அடைமழை நாளொன்றில் என் அகம் மகிழ
வெள்ளைக்காகிதம் கிழித்து கப்பல்
செய்து
அதனைக் கால்வாயில் தவளச் செய்தேன்...
எவர் கண் பட்டதோ...!
விடப்பட்ட அந்நேரமே
வீசப்பட்ட சுழற்காற்றால்
கவிழ்கப்பட்டது எந்தன் காகிதக் கப்பல்...
அதுவே நானறிந்த முதல் தோல்வி...
ஆனால் இதுவரை..
மழைக்காலங்களில் காகிதக் கப்பல் விடுவதை நான் நிறுத்தவில்லை...
அகவை பதினொன்றில்...
சகோதரனுடன் நான் வடித்த முதல் பட்டம்...
எதிர்திசையை எதிர்த்துப் பறந்ததினால்
என் கண்ணெதிரே காற்றடித்துக் கிழிந்துபோனது...
அதுவே எனது இரண்டாவது தோல்வி...
ஆனால் இதுவரை..
வானில் பட்டம் விடுவதை நான் நிறுத்திடவில்லை...
அகவை பணிரெண்டில்...
சின்னாற்று ஓடையில் என்போன்ற சிறார்களுடன்
நான் விட்ட ஆறடி வாழைமரப் படகு...
ஆற்றலையினில் சிக்கி
அவ்விடமே மூழ்கிப்போனது அப் படகு...
அது என் மூன்றாவது தோல்வி...
ஆனால் இதுவரை..
ஓடையினில் ஓடம் விடுவதை நான் நிறுத்திடவில்லை...
அகவை பதிமூன்றில்..
நண்பனால் கற்றுக்கொடுக்கப்பட்ட மிதிவண்டி பயிற்சி
நான்காவது மின்கம்பத்தில் இடித்து
முழங்காலில் காயம்படுமளவிற்கு சுழன்று விழுந்தது...
அது என் நான்காவது தோல்வி...
ஆனால் இதுவரை..
மிதிவண்டி ஓட்டுவதை வெறுத்திடவில்லை...
அகவை பதிநான்கில்...
ஊரோரக் கிணற்றில் மீன் பிடிக்கப் போய்
ஒரு மீன்கூடக் கிட்டாமல் திரும்பியது...
என் ஐந்தாம் தோல்வி...
ஆனால் இதுவரை..
நான் மீன்வேட்டையாடுவதை நிறுத்திடவில்லை...
அகவை பதினைந்தில்...
என் வீட்டு முற்றத்தில் நட்டுவைத்து வளராமல்
என் ஆசையை குழிதோண்டிப் புதைத்த குண்டு மல்லி...
என் ஆறாம் தோல்வி...
ஆனால் இதுவரை..
மல்லி வளர்க்கும் எண்ணங்கள் என்னிடம் மங்கியதில்லை...
உனக்காக மட்டும் காத்திருந்து
கருகிவிட்ட கருவேலம் பூக்கள் கூட
என் தோல்விகளின் எண்ணிக்கையை மிகைப்படுத்துகின்றது...
நானும் காத்திருப்பதை
நிறுத்தப்போவதில்லை
நீ திரும்பினாலும் ஏற்க்கப்போவதில்லை...
இப்படி நான் கண்ட பல தோல்விகளின் மத்தியில்
நீ செய்த துரோகம் மிகச் சிறியதுதான்...
இனியும் கூட..
உனக்கான முதல் காதல் கவிதை எழுதும் முயற்சியை
நான் இன்றல்ல... என்றும் கைவிடேன்...