மறைந்து வரும் தமிழர் பண்பும், பொழுதுபோக்குகளும்

பயிர் விளைய மண்ணின் தரம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தான் ஒரு மனித வளர்ச்சிக்கு கிராமத்தின் பங்கும் அடித்தளமும் அவசியமாகிறது.
நாம் சிறு பிள்ளையாக இருக்கும்போது நிறைய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை விளையாடி இருப்போம். பள்ளி விடுமுறை என்றால் தூரத்து அத்தை ஊருக்கோ அல்லது சித்தி ஊருக்கோ விடுமுறையை கழிக்க செல்வது வழக்கமாக இருக்கும். அது எதாவது ஒரு கிராமமாக தான் இருந்து இருக்கும், ஆனால் இன்றோ பிள்ளைகள் கிராமத்தை கண்ணால் கூட கண்டிருக்க வாய்ப்பு இருப்பதில்லை கிடைப்பதுமில்லை.

ஏன் கிராமத்து பிள்ளைகள் தான் அதன் இயற்கையையும் அழகையும் கண்டு ரசித்து வாழ உரிமை கொண்டவர்களா என்ன?..

எத்தனை விளையாட்டுகள் சிறு பிள்ளைகள் விளையாட அம்பாரி யானை, கண்ணாமூச்சி, குலை குலையாய் முந்திரிகாய், கரகரவண்டி, கிச்சுக்கிச்சுத் தாம்பூலம், பருப்புக்கடைந்து, தொட்டுப் புடிச்சு, பூப்பரிக்க வருகிறோம் ஒரு குடம் தண்ணி போன்ற சிறிய விளையாட்டு.

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பச்சைக் குதிரை, பம்பரம், கபடி, கள்ளன் போலீஸ், சில்லுக்கோடு, கும்மி, கோலாட்டம், பாண்டி, நொண்டி, அச்சாங்கல் போன்ற விளையாட்டுகளும்.

வயது வந்த பெண் பிள்ளைகளுக்கென்றே எழுதி வைத்த பல்லாங்குழி என்று நிறைய விளையாட்டுக்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த விளையாட்டுகளில் இருக்கும் தனித்துவமே வேறு.

நகரத்தில் குழந்தைகள் விளையாடதான் செய்கிறார்கள், ஆனால் அது அதற்கென்று வகுத்த நேரத்தில் தான். சுதந்திரமற்ற சூழல் பிள்ளைகளின் முகத்திலும் உள்ளத்திலும் வெறுமையை தான் காண முடிகிறது. புத்தக சுமை, வீட்டில் படிக்க சொல்லி பெற்றவர்கள் படுத்துவது அது ஒரு தனி சுமை.

ஆனால் கிராமம் அப்படி இருப்பதில்லை. பேச்சு, விளையாட்டு, மற்றவர்களோடு பழகுவது, குடும்பத்தின் உடனான ஈடுபாடு, உடன் பிறந்தவர்கள் அன்பு, தாயின் தாலாட்டுப் பாட்டு, பாட்டி கதைகள், சொந்தங்கள், வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாட்டு நாய்கள், சிட்டுக்குருவி, பொங்கல் சமயத்து கும்மிப் பாட்டு, ஊர் மாரியம்மன் பண்டிகை, தேர் திருவிழா, உப்புக்கண்டம் குழம்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இல்லை என்று கூறுவதற்கு நகரத்தில் ஆயிரம் இருக்கிறது. நகரம் நரகமாகி கொண்டே இருக்கிறது.
பக்கத்து வீட்டின் துணைக் கூட வெள்ளமோ புயலோ வந்தால்தான் தேடுகிறார்கள். நகர வாழ்கை வசதியாக இருந்தும் நாம் எல்லாருக்கும் மனதில் ஏதோ ஒரு இறுக்கத்தை உணர்ந்து கொ‌ண்டுதா‌ன் இருக்கிறோம்.
விட்டுக்கொடுத்து வாழும் வாழ்வையும், அன்பையும் பண்பையும் நம் வீட்டில் வைத்து தான் குழந்தைகள் கற்கிறார்கள்.

முன்புபோல் ஒவ்வொருவீட்டிலும் பத்து பிள்ளைகளா இருக்கிறார்கள், ஒன்றுக்கொன்று துணையாய், நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி வளர்வதற்கு.
ஒன்றொ இரண்டோ தான், அதுவும் அடித்து உதைத்துக் கொண்டு சண்டை போடதான் நேரம் இருக்கிறது. அதுவும் பிள்ளைகள் கொஞ்சம் பக்குவமாக இருக்கும் வீட்டில் பெற்றவர்கள் போடும் சண்டையே அவர்களை கெடுத்து விடுகிறது. அன்பிற்கு ஏங்கிப் போய் சிரிக்கக் கூட குழந்தை மறந்து விடுகிறது.
சரி பெரியவர்கள் யாரவது வீட்டில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவர்களையும் கொண்டு போய் முதியோர் இல்லத்திலோ அல்லது அனாதை இல்லத்திலோ விட்டு விடுகிறார்கள்.

நம்மை பெற்றவர்கள் தான் பிறந்த ஊர் மறந்து, உறவு மறந்து, சுற்றம் சொந்தம் என மறந்து பெற்ற பிள்ளை தன் அருமை உணர்ந்து உடன் இருப்பான் என்ற கனவோடு தான் அந்த வளர்ந்த குழந்தைகள் நாம் இழுத்த இழப்பிற்கு எல்லாம் பணிந்து நம்மோடு வருகிறார்கள். ஆனால் நாமோ அடுத்து நம் பிள்ளை நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று வாழ்க்கை பாடம் சொல்லி கொடுக்கிறோம்

" உனை பெற்றவன் உன்னால் அனாதையாக்கப்பட்டால் நாளை உன் பிள்ளை உன்னையும் தெருவில் தான் நிறுத்துவான்".

நகரத்தில் அன்மையில் இருப்பவர்கள் கூட தெரிந்திருக்க வாய்ப்பு இருப்பது இல்லை.
எனக்கு தெரிந்தே கிராமத்தில் குழந்தைக்கு என்று கேட்டால் பால் கூட இலவசமாக கிடைக்கும்.
என் அப்பாவைப் பெற்ற பாட்டி பசி என்று யார் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உண்ண உணவு தந்திருக்கிறார். தன் பசியைக் கூட பொருட்படுத்தியது இல்லை.

சொல் சுத்தம், வாக்கு சுத்தம் இது இரண்டும் அங்கே எப்போதும் இருக்கும். வீட்டிற்கு விருந்தினர் வந்தால் வந்தவர்களை வாருங்கள் என்று வீட்டிற்குள் அழைக்க வேண்டும், ஒரு சொம்பு நிறைய தண்ணீர் அல்லது மோர் பருக தர வேண்டும். உணவிட்டு உபசரித்து அனுப்புவது நம் வழக்கம். வெறும் பகட்டிற்கு விருந்தளித்து பெருமைக்கு உணவு படைப்பது அல்ல, இன்னமும் கிராமத்து சமையலுக்கு ஏங்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

இப்போதல்லாம் வெற்றிலை பாக்கு கிழவிகளை பார்ப்பது கூட அரிதான ஒன்றாகிவிட்டது. என் பாட்டி எப்போதும் வெற்றிலை போடும் போது அதன் காம்பை கில்லி எனக்கு தின்ன தருவார்கள். எப்போதவது காக்கா கதை சொல்லி சாப்பாட்டு உருண்டைகளையும் உண்ண தருவார்கள். எங்கள் குடும்பத்தைப் பற்றியும் பெருமைகள் பற்றி நிறைய கூறியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் உயிரோடு இல்லை, ஆனாலும் எனக்கென்று என் குடும்பம் பற்றி கூறும் அளவிற்கு என் முன்னோர்களும் என் பெற்றோரும் எனை வளர்ந்து இருக்கிறார்கள்.
நான் சொல்ல நினைப்பது ஒன்றுதான், தாத்தா பாட்டி உறவு என்பது கிடைத்தற்கரிய உறவு அதை பகட்டிற்கோ பிறர் குறை கூறும் அளவிற்கு ஆக்கி விடாதீர்கள். பாட்டி கூறும் கதைகளில் ஒரு குண்டுமணி அளவிற்கு கூட பெறாது இப்போது பிள்ளைகள் பள்ளியில் படிப்பது.

சிறு பிள்ளைகள் மிக அழகாக கதை புனைவார்கள் அது அவர்கள் வாழ்வின் அனுபவமாக இருக்க வேண்டியது அவசியம். வெளிநாட்டு சுற்றுலாவோ அல்லது பொழுதுபோக்கு அம்சங்களோ அதில் இடம் பெறக்கூடாது.
வாழ்வில் நாம் திரும்ப பெற முடியாத மழழை பருவத்து நினைவுகளை உருவாக்கக் கூட நேரம் இல்லாமல் அந்த பிஞ்சு உள்ளங்கள் இயந்திரங்களாக மாறி வருகிறது. அவர்கள் தன் வாழ்வில் தான் எங்கிருந்து வந்தோம், நம் பூர்வீகம், அதன் பெருமை என எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் அவர்கள் வாழ்வில் சாதிக்காதது, செய்ய ஆசைப்பட்டது என எல்லாவற்றையும் பிள்ளைகள் தலையில் வைத்து பாரத்தை ஏற்றி விடுகிறார்கள்.

உங்கள் குடும்பத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பெருமையாக பேசுங்கள், உங்கள் ஊரின் பெருமையைக் கூறுங்கள், முழுஆண்டு விடுமுறையை உங்கள் உறவுகள் வீட்டிலோ அல்லது உங்கள் பூர்வீக ஊரிலோ சென்று செலவிடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளை தனியாக உறவினர் வீட்டில் தங்க விடாதீர்கள், எங்கு சென்றாலும் நாம் அருகில் இருந்து பார்த்துக் கொள்வது போல் இருக்காது.
சென்று தங்க முடியாது என்றாலும் சொந்தங்களை காண வருடத்தில் ஒரு நாளாவது சென்று வருவதை வாடிக்கையாக்குங்கள். அவர்கள் உடன் இருந்து உங்கள் குடும்பத்தை உணர செய்யுங்கள். குடும்பமும் அதன் பாரம்பரியமும் உங்கள் வழி பிள்ளைகள் கற்கட்டும். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போவதால் தான் இன்றைய சூழ்நிலையில் புரிதலும், விட்டுக்கொடுக்கும் மன பாங்கும் இன்றி பிள்ளைகள் தவிக்கிறார்கள்.

நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி, உங்கள் குலத்தின் பெருமை பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், விளையாட்டு என பிள்ளைகள் மனதில் பதிய சொல்லுங்கள். உங்கள் அடையாளமும் முகவரியும் உங்கள் பெற்றோரும், பிள்ளைகளுக்கும் தான் என்பதை மறவாதீர்கள்.

வளரும் குழந்தைகள் நாளைய சரித்திரம் படைப்பவர்கள்,
வளர்ந்த குழந்தைகள் அவர்கள் சரித்திரம் எழுத உதவும் குறிப்புகள்.


நன்றி.

எழுதியவர் : தமிழ் ப்ரியா (15-Jan-17, 10:26 pm)
பார்வை : 802

மேலே