தைப்பிறந்தும்

தைப்பிறந்தும் வழிபிறக்க
வழியின்றி போனதய்யா...
பொய்மையதும் நாட்டினிலே
போட்டியென ஆனதய்யா...

விளைந்தநிலம் அத்தனையும்
வீணாகி வரண்டதய்யா..
பிழைக்கின்ற வழியெல்லாம்
பெருந்துன்பம் திரண்டதய்யா....

இருக்க இடம் இருந்திட்டால்
இன்பமெல்லாம் பொங்கிடுமா ?
வெறுப்புற்று மக்களெல்லாம்
வெறும்வயிராய் வாழுதய்யா....

அறிவாலே இன்றிங்கு
அகிலத்தையே ஆண்டாலும்
செறிவான வாழ்வதுவும்
சிதையிங்கு அழியுதய்யா....

செவ்வாயில் குடியேறும்
சிந்தனைகள் வளர்ந்தாலும்
ஒவ்வாத வாழ்க்கையதில்
ஒளியெல்லாம் பிறந்திடுமா ?

பொன்விளைந்த பூமியெல்லாம்
புழுதியென காய்ந்தய்யா....
எண்ணிஎண்ணி மாளவில்லை
எருதெல்லாம் மாய்ந்தய்யா.....

மானுடத்தை மதிக்காத
மாந்தர்தம் வெறிச்செயலும்
நாணமதும் கொள்ளாமல்
நாய்போன்று அலையுதய்யா...

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (19-Jan-17, 8:08 pm)
பார்வை : 52

மேலே