இலங்கைத் தேயிலை

இலங்கைக்கு வர்த்தக ரீதியாக தேயிலை வந்திறங்கி இன்று ஒன்றரை நூற்றாண்டு பூர்த்தி .அதற்காய் இந்தக் கவிதை

சீனாவில் நின்றிறங்கி செம்மண்ணில் வேர்பிடிக்க
மானாட அன்று மயிலாடக் - கானகமாய்
தென்பட்டக் காடுகளில் தேயிலைநீ கால்பதித்த
ஒன்றரை நூற்றாண்டு இன்று.

ஒன்றரை நூற்றாண்டு ஒன்றுடன் ஒன்றென
ஒன்றியே எங்கள் உழைப்பினால் – நின்றுயர
வர்த்தக ரீதியில் வந்திட்ட நாளென்றே
கர்வமாம் தேயிலைக்கு இன்று.

என்னப்பன் பாட்டன் இலங்கைக்கு கால்பதிக்க
முன்னொரு காலம் முடிவுசெய்த – துன்னாலே!
இன்னுமவர் சந்ததி இன்னல் அடைந்திருக்க.
முன்னின்றக் காரணம் நீ.

காடழித்து உன்னை கவனமுடன் நாட்டிவைத்துப்
பாடதனைப் பட்டே பரலோக – ஏடதிலே
என்றோ இடம்பிடித்துக் கொண்டவர்கள் வாழ்வினையே
இன்று நினைவேந்தும் நாள்

தரமில்லா வாழ்வெனினும் இன்றளவும் நாங்கள்
தரணியிலே வாழ்வதற்குத் தந்தாய் – வரம்நீ
கரங்கூப்பி நாளும் தொழுமெங்கள் பாட்டின்
சுரம்நீ வளர்க செழித்து
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Jan-17, 10:05 am)
Tanglish : ilangaith theyilai
பார்வை : 104

மேலே