அடையாளங்கள்
காதோரம் நரையே கம்பனது காப்பியத்திற்கு காரணமாம்,
கடலோரம் கரையே கடல் பயணியின் ஆசையாம்,
மனதோரம் குறையே ஆண்டவன் சேவடி நினைவாம்.
நா தரும் சுவையே நல் உணவிற்கு அடையாளமாம்,
உடல் தரும் அயர்வே நல் உறக்கத்திற்கு முதலாம்,
மனிதர் தரும் சேவையே நல் பண்பின் வழியாம்.
வழி வழி வந்தோர் தந்த பாரம்பரியம் போற்றிடல் வேண்டும்,
தம் வழி என்று தனி வழி செல்லல் தவறுதல் ஆகும்,
எவ் வழியிலும் சேர்த்திடலாம் செல்வம் என்பது ஈனப் பிழைப்பாகும்.
நேர்மைக்கு விலை உண்டு, பார்வைக்கும் பொருள் உண்டு,
பொறுமைக்கும் காலம் உண்டு, வறுமைக்கும் மாற்றம் உண்டு,
தவறுக்கு தண்டனை உண்டு, தனிமைக்கும் இடம் உண்டு.
தக்கார் வழி நின்று, தகைசால் மொழி பேசி,
உண்மைக்கு உடன் நிற்றல், உதவிடும் குணம் காட்டுதல்,
உயர்வாகும், நிலை நிறுத்தும் பெயர் ஆகும்.