ஜல்லிக்கட்டை வென்றெடுப்போம் வாரீர்

ஜல்லிக்கட்டை வென்றெடுக்க வாரீர்
பாவலர் கருமலைத்தமிழாழன்

தமிழினத்தின் அடையாளம் ஜல்லிக் கட்டு
தமிழ்ப்பண்பின் குறியீடு ஜல்லிக் கட்டு
தமிழர்தம் தொன்மைகுடி ஆயர் தம்மின்
தழைத்தகுல விளையாட்டு ஜல்லிக் கட்டு
தமிழ்நிலத்து முல்லைநில மக்கள் தம்மின்
தன்மான விளையாட்டு ஜல்லிக் கட்டு
நிமிர்ந்தந்த விளையாட்டை நடத்து தற்கே
நிறைதோளின் தமிழாநீ ஒன்று சேர்வாய் !

சிந்துவெளி நாகரீகம் உலகின் மூத்த
சிறப்பான தமிழர்தம் நாக ரீகம்
சிந்துவெளி அகழ்வுதனில் கிடைத்த காசில்
சித்திரமாய் உள்ளதிந்த எருதுச் சின்னம்
முந்தியுன்றன் பாட்டன்முப் பாட்ட னெல்லாம்
முத்திரையைப் பதித்தவீர ஜல்லிக் கட்டை
இந்தியாவின் தடையுடைத்து நடத்து தற்கே
இருதோள்கள் புடைத்தெழவே தமிழா வா வா !

ஏந்திழையாள் கைபிடிக்கக் காளை யர்கள்
ஏறுதனைத் தழுவியவீர விளையாட்டு
தீந்தமிழர் உயிர்கஞ்சா மல்கொல் லேற்றை
தீரமுடன் அடக்கியவீர விளையாட்டு
ஏந்திபாலை கலித்தொகையும் பெரும்பா ணாறும்
ஏத்திபுகழ் பாடும்வீர விளையாட்டு
மாந்தயின முதல்விளை யாட்டை மீட்க
மாத்தமிழா ஒன்றிணைந்தே எழுந்து வா வா !

எருதுபிடி மஞ்சுவிரட்டு என்ற ழைத்தே
ஏற்றமுடன் ஊர்அலங்கா நல்லூர் தன்னில்
பொருதுவிழுப் புண்களினைப் பெறுவ தற்கே
பொழுதெல்லாம் பயிற்சிபெற்ற காளை யர்கள்
விருந்துண்ணல் வீரவிளை யாட்டென் றார்த்து
விழிதிறந்து காத்துள்ளார் அடக்கு தற்கே
அருந்தமிழா தடைதன்னை உடைப்ப தற்கே
ஆர்ர்தெழுவாய் தில்லிக்குன் வலிமை காட்டு !

காளைகளைக் கொம்பழுத்திப் பிடிக்கும் வீரக்
காளையர்தம் ஆண்மைக்கே நெஞ்சை ஈந்து
பாவையர்கள் மணமுடித்த தமிழ மண்ணில்
பழம்வீரம் காட்டுதற்கே தடைவி தித்தார்
நாளையுன்றன் வீரத்தைக் காட்டு தற்கும்
நல்முன்னோர் விளையாட்டை மீட்ப தற்கும்
தோளைத்தட்டி எழுந்திடுவாய் ! தமிழா வீரத்
தொன்மையினை உலகுணரச் செய்ய வா வா !

செங்காந்தள் படவப்பூ காயாம் பூவைச்
செம்வீரக் குறியீடாய் சூடிக் கொண்டு
பங்கயப்பூ முகப்பெண்ணை மணப்ப தற்கே
பாய்ந்துவரும் வாடிவாசல் காளை தம்மைத்
தங்கையால் திமில்பிடித்து அடக்கி வென்று
தமிழ்வீரம் காட்டுதற்குத் தடைவி தித்தார்
இங்கந்தத் தடைதகர்க்க ஒன்று சேர்ந்தே
இந்தியாவின் தலைமைக்கு உணர்த்த வா வா!

காங்கேயம் புலிக்குளமாம் அலங்கா நல்லூர்
காரிபுள்ளி செவலைகுரால் வெண்கால் என்றே
தாங்கிபெயர் கொண்டிருக்கும் காளை கள்தாம்
தாவிவரக் கழுத்துதனைப் பிடித்துத் தொங்கி
வீங்கிருக்கும் தோள்வலியால் அடக்கு கின்ற
வீரவிளை யாட்டிற்கே தடைவி தித்தார்
ஈங்கந்தத் தடைதகர்க்க ஒன்றி ணைந்தே
இடிமுழக்கம் செய்தற்கே எழுந்து வா வா !

பண்பாட்டின் பெருவிழாவாம் இளைஞ ரெல்லாம்
பழம்வீரம் வெளிகாட்டும் விழுப்புண் விழாவாம்
மண்தமிழின் பெயர்சொல்லும் மரபு விழாவாம்
மானத்தின் விழாவிற்கே தடைவி தித்தார்
கண்களிலே கனலேற்றித் தமிழா உன்றன்
கண்ணான விளையாட்டை மீட்ப தற்கே
திண்தோள்கள் தட்டியெழு நீதி மன்ற
திறவாத கதவுகளைத் திறக்க வாவா !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (24-Jan-17, 8:36 pm)
பார்வை : 189

மேலே