புறக்கணி தமிழா புறக்கணி
புறக்கணி… தமிழா… புறக்கணி…
தமிழா ! …
நீ பொங்கினாய்!… சிந்தனைத்
தீ எங்கிலும் தங்கினாய்!…
ஜல்லிக்கட்டுக்கு நீ
கில்லியாய் கிளர்ந்தபோது…
காளையினங்கூட சற்றுக்
கலங்கித்தான் போனதடா…
உன் சீற்றலில்தான்
உன்னதமான சட்டம்
உருவம் பெற்றது!…
ஒப்பற்ற வரலாறை
உலகுக்கு நீ தந்தாய் !…
உயர்ந்தவ னெப்போதும்
தமிழனென் றானாய் !…
உள்ளத்தால் வரிந்தெடுத்து
உள்ளார்ந்த அன்பினாலே
பாசத்தைப் பரிமாறுகிறேன்…
பாராட்டுகளைப் பரிசளிக்கிறேன்…
ஆயினும்,
தமிழனே நீ…
தெரிந்தோ… தெரியாமலோ…
வேண்டாத செயல்களிலே
விரையத்தில் வீழ்கின்றாய் !
அறிந்து கொள்ளடா
ஆருயிரே !....
இதோ …
பிப்ரவரி 14 …
எதிர்நோக்கி இருக்குதடா..
உன்னை
குதூகலப்படுத்துதற்கு…
என் குலவிளக்கே…
மன்னவனே…
காதலர் தினமென்று
கற்பித்த அந்நியன்…
தான் கொழித்து
தான் மட்டும்
நிகரின்றி நடைபோட
பகர்கின்ற நஞ்சு இது…
தமிழனின் தொன்மையிலே
காதல் இருந்தது;
காதலர்கள் இருந்தனர்;
காதல் திருமணங்கள்
கணக்கின்றி இருந்தனவே…
சங்க இலக்கியங்களே
சான்றுகளைச் சித்தரிக்க…
அங்குமிங்கு மென்று
பொங்கிப் பலக்கதைகள்
பூர்வகாலமதில் இருந்ததுண்டு…
ஆனாலும் பார் தமிழா…
ஆதாரம் தேடினாலும்
காதலர் தினமென்ற
காட்டுமிராண்டித் தனமென்றும்
இருந்ததே யில்லையடா…
கற்றறிந்தோர் நன்கறிவர்…
“காதலர் தினம்” என்னும்
கீழ்நிலை கலாச்சாரம்
தேவையில்லை இனியுனக்கு…
அன்னையர் தினமென்றும்…
தந்தையர் தினமென்றும்…
முதியோர் தினமென்றும்…
முட்டாள் தினமென்றும்…
பட்டியலிட முடியாத
பலதினங்கள் இதுபோல
பலவுண்டு பாரினிலே…
மூளைச் சலவைகளில்
மூழ்கிப் போனவனே …
விழித்துக்கொள் தமிழா…
உன்னை ஏமாற்றி
தன்னை உயர்வாக்கும்
அந்நியனின் அட்டகாசம்
நம்நாட்டில் தேவையில்லை…
புறக்கணி….
புறக்கணி….
காதலர் தினத்தைப்
புறக்கணி…