பூவே பூச்சூடவா

பூச்சரம் கட்டிடும் பாங்கொடு கூரிய
வீச்சரிவா ளொத்த விழியாலே – பாச்சிடும்
அம்பெந்தக் காளை அகந்தாக்கிக் கொல்லுதோ
செம்பவள மொட்டேநீ செப்பு.

நீகட்டும் பூச்சரம் நின்கூந்தல் சேர்ந்திடல்
ஆகட்டும் தப்பு அதிலில்லை – பூக்கட்டும்
உன்வாழ்வு பூக்கணும் என்றால் கழுத்தினில்
பொன்தாலி வேண்டும் புரி.

பாகட்டும் பாவலன் பல்லவிக்கு உன்னழகு
மேகங்கள் சொட்டும் மழையாகும் – தாகம்
அறியாத தண்ணீர் அருவிநீ நெற்றிக்
குறித்தீட்ட தேவைஆண் கொக்கு.

குங்குமம் இல்லாத கோலமயில் வாழ்வினில்
சங்கமிப்ப தில்லையே சந்தோசம் – மங்கலத்
தீவே மனமொன்றித் தேன்பருக லாமேயென்
பூவேநீ பூச்சூட வா.
*மெய்யன் நடராஜ்




படத்துக்கு கவிதை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Jan-17, 1:51 am)
பார்வை : 213

மேலே