சம்சார சங்கீதம்
சம்சார சங்கீதம்...!
இதயத்தின் நேசம் இருவிழிவழி வழியும்
இன்பத்தின் வாசம் அசைமொழியாய் பொழியும்
இடைப்பட்ட நாணம் இருட்சியில் ஒழியும்
இடைத்தொட்டக் கரங்கள் இலக்கின்றி நெகிழும்
மந்திரப் புன்னகை தந்திரமாய் இசைக்கும்
சந்திரன் பொன்னொளி சுந்தரியை வதைக்கும்
அந்தரி அபிநயம் சித்தனையும் மயக்கும்
இந்திரலோகமே இதைக் கண்டு வியக்கும்
அபரஞ்சி தேகம் அநலியாய் கொதிக்கும்
சிரபுஞ்சி மேகமாய் அத்தன்மோகம் தணிக்கும்
மஞ்சரியின் நெஞ்சக்குழி மருளி உள்வாங்கும்
நெஞ்சமர்ந்த மஞ்சத்தான் துணைமேவி அடங்கும்
மாசற்ற மணவாழ்வு மனமொத்து நாடும்
மனைமாட்சி சங்கீதம் ஜதியோடு ஆடும்
நெஞ்சத்தின் சமிஞ்சை சுதியோடு பாடும்
மஞ்சத்தின் வாஞ்சை இறுதிவரை கூடும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி