காத்திருக்கின்றேனடிக் கிளியே

இதழ்களில் பேசுவாயோ! இமைகளில் பேசுவாயோ! - உன்
கயல்களின் இடையிலே இயல்களை வீசுவாயோ!
காத்திருக்கின்றேனடி கிளியே! உன்கண்களைக் கண்டிட நான்
காதலின் நெஞ்சத்துடன் பூத்திருக்கிறேனடி கிளியே!
புன்னகைத்தாயடி! நீஎன் புன்னகைத் தாயடி! - உன்
புன்னகையாலே என்னுள் புதுமைகள் படைத்தாயடி!
பார்த்திருக்கின்றேனடி கிளியே! முகமுத்துக்கள் சிதறிட- என்
துன்பங்கள் ஓடிடுமென பார்த்திருக்கிறேனடி கிளியே!
இன்பமும் நீயடி! துன்பமும் நீயடி!- நீ
இமைத்திடும் நொடியிலே இனிமையாய் நீயடி!
உன்இன்முகம் தானடி கிளியே! இனிமைகள் தந்திடும்
இயல்களின் வயல்களாய் இருக்கின்றத்தேனடி கிளியே!
கார்குழல் பேசுதடி! காதுமடல் பேசுதடி! - உன்
கண்கள் மட்டும்தான் வெறுத்தெனை வீசுதடி!
கன்னங்கள்தானடி கிளியே! என்னுள் வண்ணங்கள்
ஊற்றிடும் மது கிண்ணங்கள் தானடி கிளியே!
உருவத்தில் மயிலடி! குரலினில் குயிலடி! உன்
சிதறிடும் சிரிப்பினில் சிற்பமாய் நீயடி!
தள்ளிநிற்கின்றேனடி கிளியே! நீ அருகினில் வந்திட- நான்
பொருத்தம் இல்லையென தள்ளியேயிருக்கிறேனடி கிளியே!
காத்திருக்கின்றேனடிக் கிளியே! என் கனவுகள் தொலைந்திடும்
நாட்களை எண்ணிப் பார்த்திருக்கின்றேனடிக் கிளியே!
காலங்கள் கடந்திடும் கசப்புகள் தொலைந்திடும் உன் கால்
கொலுசொலிகள் என்றும் என்னுடன் நிலைத்திருக்குமடி கிளியே!
ஒவ்வொரு நாளும் என் நெஞ்சத்தில் மிகுதியாய்
நிறைந்து நீங்கா இன்பங்கள் தந்தவள் நீயடி! - என்
உணர்வுகளை உணராமல் போனாலும் இன்பமுடன்
வாழ்ந்திருப்பாயடி கிளியே! வாழ்த்துகின்றேனடி கிளியே!!!