குடி மக்கள்
ஒரு
சாமானியன்
சமூக அக்கறையுடன்
அரசுக்குவரையும்
அவலமடல் .!
சிரசுகனத்து
இதை நான் எழுதவில்லை. .
மனசுகனத்து
இதை நான் எழுதுகிறேன் .
அரசே !
தேசக்குடிமகன்களில்
அநேகர்
நாசக்குடி மகன்களாய்
நாட்டில்
நடமாடுகிறார்களே
இது ,
யார்செய்த பிழை ?
குடிமக்களை
'குடி' மக்களாய்
நீதானே பழக்கிவிட்டு
கூத்தாட்டம் பார்க்கிறாய்?
நீ
கடைவிரிக்கப்போய்த்தானே
அவர்களின்
நடைமாறிப்போனது?
நீ காட்டிய
போதையின் பாதையில்
அவர்கள்
போய்க்கொண்டிருக்கிறார்கள் !
'குடி'யால்
நடுத்தெருவுக்கு வந்த
குடும்பங்கள் எத்தனை..எத்தனை ?
'குடி'குடித்து
குடல் கெடுத்து
உடல்நலங்கெட்டு
உயிரைவிட்டவர்கள் எத்தனை ..எத்தனை ?
'குடி'மன்னர்கள்
குடித்துவிட்டு
போதைவாக்கில் புரிகின்ற
அசிங்கப்பேச்சுக்கள்
அட்டகாசங்கள்
அட்டூழியங்கள்
கடுமையானகபளீகரங்கள்
நீ
கண்டுரசிக்கும்
கண்கொள்ளாக்காட்சியா..?
ஊருக்குஊர்
வீதிகளில்
'குடி'மகன்கள்
தள்ளாடித்திரிவதும்
தடுமாறிவீழ்வதும்
இறந்தசடலமாய் விழுந்துகிடப்பதும்
மக்கள்
அன்றாடம் காணும்
அருவருப்பான காட்சிகள் .
உனக்குமட்டும்
இது
அழகொளிரும் காட்சியா ?
'அரசுத்தேர் ஓடுவதற்கு
அச்சாணியே
மது வருமானம்தான் '-என்ற
அறைகூவல்
அப்பட்டமான உண்மையானால்
நான் கேட்கிறேன்
அப்படி ஒரு
தேரோட்டம் தேவைதானா?
திருவிழா தேவைதானா?
'ஒருபுறம் 'குடிகுடியைக்கெடுக்கும்'
'குடிப்பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு ' -என்று
அச்சமூட்டுகிறாய் ..
எச்சரிக்கிறாய்..!
இன்னொருபுறம்
ஊருக்குஊர்
தெருவுக்குத்தெரு
மதுக்கடைகளைத்திறந்து
இச்சை யூட்டுகிறாய்..
இனம்கெடுக்கிறாய்..!
தொட்டிலையும் ஆட்டிவிட்டு
பிள்ளையையும் கிள்ளிவிடுகிறாய் !
உனக்கு
ஏன்இந்தஇரட்டைவேடம் ?