உன்னுடன் கழிந்த நினைவுகள் சுகமானது

உன்னுடனே கழிந்திட்ட
------ உள்ளார்ந்த நினைவுகளே
என்னுள்ளே சுகமாக
------- எம்மருங்கும் உள்ளதடி !
பன்மொழிகள் காட்டுகின்றாய்
------ பாசத்தால் ஏங்குகின்றேன்
என்நினைவும் மாறிடவே
------ என்செய்வேன் சொல்லிடுவாய் !!!


தயங்காதே என்னவளே
------- தரைபார்த்து நடைபழகு !
முயல்போன்றே தாவியுமே
------- முழுதாகப் பிடித்துக்கொள் !
கயல்விழியாள் எனைநோக்கக்
------- காதலினால் மெய்மறந்தேன் !
வயல்வெளியில் வேலைசெய்தே
-------- வகையுறவே நேசிப்பேன் !!!!


தோழியோடு என்தலைவி
-------- தோகைமயில் எழிலழகி !
வாழியவே கற்புநெறி !
------- வாழ்த்தட்டும் அன்புநெறி !
கோழிகூவும் முன்னருமே
------- கோமகளும் விழித்திடுவாள் !
ஆழிபோல அன்பினாலே
------- அலையெனவே அணைத்திடுவாள் !!!


மீனவனும் நானடியோ
------- மீன்கண்ணாள் நீயடியோ !
தானதர்மம் பலசெய்தேன்
-------- தவமாக உனைப்பெற்றேன் !
ஆனவரைக் காதலிப்போம்
------- அழியாதே நம்காதல் !
ஊனமிலை இதயத்திலே
------- உண்மைகாதல் வெற்றிபெறும் !!!!


பெண்ணிலவே வெட்கத்தால்
------- பேசுவாயோ நாணத்தால்
கண்ணிரண்டும் மொழிபேசக்
------- கார்கூந்தல் கொண்டையிட
மண்ணுலக தேவதையே !
-------- மரகதமே பாராயோ !
எண்ணமெனும் ஏட்டினிலே
------ எழுதிவைத்தேன் உன்பெயரை !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Feb-17, 4:08 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 176

மேலே