அடுக்கடுக்காய் ஆசைகள்
கையசைத்து வரவேற்பதுபோல்
ஆடிஅசையும் தென்னந்தோப்பு...
அதன் நடுவில் ஒற்றைக்குடிசையாய்
ஓலைக்குடிசையொன்று...,
முற்றத்து நிழலினில்
முதுகுசார ஓர் குதிரை
இப்படியே இருக்ககூடாதா...?
நுரைதள்ளி கரைவந்து
கதைசொல்லி மறையும் அலை...
அலையுடன் கொஞ்சிக்கொள்ள
ஆர்ப்பாரிக்கும் நண்டுக்கூட்டம்...,
கால்நனைய உட்கார்ந்து
பலகதைகள் பேசிக்கொள்ள...
அருகினில் நீயும்
அப்படியே இருக்ககூடாதா...?
பூமிதொடும் முதல் மழைத்துளி
பனியோடு படுத்துறங்கும் புல் தரை
வண்டுடன் சல்லாபிக்கும் பூவிதழ்...
உயர உயர பறந்து
உச்சி முத்தமிடும் சிட்டுக்குருவி
இப்படியே இருக்கக்கூடாதா...?
கல்லெறி வேண்டியும்
வாலைக்குழைத்து வளைய வரும் தெருநாய்...
எப்போது உறங்குவோம்
அப்போது நுழைவோம் என
விழிநோக்கி காத்திருக்கும் செல்ல பூனை...
இப்படியே இருக்ககூடாதா...?
அசரும் நேரத்தில்
ஆசையாய் ஓடிவந்து
பழம் தின்னும் பச்சைக்கிளி...
ஓய்ந்துவிட்டால் வாழ்க்கை இல்லை
என ஓடி ஓடி உழைக்கும்
சின்னஞ்சிறிய சிற்றெறும்பு
இப்படியே இருக்ககூடாதா...?
தலைவைத்து சாய அன்னை மடி...
கோபம் வந்தால் குட்டிக்கொள்ளவும்
ஆசைவந்தால் அள்ளி அணைக்கவும்
அன்பு தந்தை...
பாசத்தை பங்குபோடவும்
பகிடியாய் சண்டை பிடிக்கவும்
அன்பு மனைவி...
விழிக்குள் வைத்து காப்பதற்கு
சகோதரர்கள்
இப்படியே இருக்ககூடாதா...?