தமிழ் தொலைக்காத தலைமுறை நாங்கள்
தமிழ் தொலைக்காத தலைமுறை நாங்கள்!!!
கதிரோடு ஆடும் வயல்வெளியை ஒப்ப
தினந்தோறும் எண்ணத்தில் தமிழ் சதிராடும்
சுற்றத்தின் நினைவுகளால் நெஞ்சம் அலையாடும்-தமிழ்
தொலைக்காத தலைமுறை நாங்கள் ! .
அங்கமென எம்முள் வளர்த்த மொழியை
பங்கம் ஏதும் வாரா வண்ணம்
சங்கம் வைத்து வளர்க்கும் -தமிழ்
தொலைக்காத தலைமுறை நாங்கள் !.
அக்கரைக் கண்டம் வந்த போதினும்
நித்திரைப் பொழுதுகள் நெருங்கும் போது
தமிழ்ச்சித்திரக் கதைகள் மழலைக்கு சொல்லி
அக்கறை கொள்ளும் நெஞ்சமெல்லாம் -தமிழ்
தொலைக்காத தலைமுறை நாங்கள் !.
தமிழன் என்ற இனமுண்டு -அதற்கு
சாதியால் மதத்தால் அழிவுண்டு -என
எண்ணங் கொண்டு எவரேனும் இருப்பின்
பதாகை தாங்கி உரக்கச் சொல்வோம் -தமிழ்
தொலைக்காத தலைமுறை நாங்கள் !.
-பாவி