இதயத்தில் நீந்துகிறாய் நீ

இதயமெனும் தடாகத்தில் மீனாய்நீ நீந்துகிறாய்
இமயத்தின் சாரலதனை இங்கே வீசுகிறாய்
இதழவிழ் கமலமாய் வதனம் சிவக்கிறாய்
இருவிழி அசைவினில் எனை வீழ்த்துகிறாய்......


யாழிசை யாசகம் கேட்டிடும் வாய்மொழி
ஏழிசை இராகந்தனைச் செவிநுகர் தேன்கனியாய்
ஆழியென ஆனந்தம் அகத்தினில் பொங்கிட
நாழிகைப் பொழுதில் தந்தும் செல்கிறாய்......


நெற்குவியல் கண்டு விரைந்திடும் எலியாய்
பொற்குவியல் பார்த்து மயங்கும் கள்வனாய்
கொற்றவை மகளுன் குணத்தின் அழகினில்
அற்றைத் திங்களாய்த் தேய்ந்திட வைக்கிறாய்......


கன்னம் வருடும் காலை இளந்தென்றல்
கார்முகில் கையேந்தும் நீள்குழல் கலைத்திட
கவின்மிகு உருவாய்க் கண்களைப் பறித்திட
காமனின் பாணங்களில் சிலையாய் நிற்கிறேன்......


உற்றவள் நீயென நெஞ்சம் நினைந்து
நற்றமிழ்க் கவியோடு பின்னே தொடர்ந்து
சற்றே நீநின்று யாதென்று கேட்கையில்
நெற்றியில் நீர்வடிய கற்றதை மறக்கிறேன்......


வறுமையில் வாடுவோர்க்குக் கிடைத்த நல்லுணவாய்
குறுநகை மின்னல் உன்னில் மலர்ந்து
வறுநில மனதில் நீபூவாய் முளைத்திட
மறுநொடி காதல்வானில் காற்றாய்ப் பறக்கிறேன்.....

எழுதியவர் : இதயம் விஜய் (26-Feb-17, 12:47 pm)
பார்வை : 263

மேலே