உன்னுடன் கழித்த நினைவுகள் சுகமானது

தென்திசை வீசும் குளிர்ந்த தென்றலாய்
உன்றன் நினைவுகள் நெஞ்சம் மோதுதே
சன்னலில் பார்த்திட கருமுகில் கிழிக்கும்
மின்னல் கீற்றாய் சோகந்தனைக் கிழிக்குதே......


பச்சைப் புல்வெளியில் விழுந்திடும் பனியில்
ஒற்றை விரலினை உன்னுடன் கோர்த்து
நனைந்து செல்லும் நமதிரு பாதங்கள்
பொய்கை ஆடும் கமலமாய் மிதந்ததே......


கூவும் குயிலின் புதுமொழி கேட்டு
தாவும் மான்களாய் மனங்கள் இரண்டும்
அகவும் மயிலின் ஆனந்த நடனத்தில்
நகமும் சதையாய் ஒட்டிக் கொண்டதே......


உச்சி வெயிலினைக் கடந்து நிழலில்
உள்ளங்கள் அமர்ந்து உறவாடும் பொழுதில்
நெற்றியில் உதிரும் வியர்வைத் துளிகள்
நெஞ்சில் விழுந்து காய்ச்சல் வந்ததே......


கொட்டும் மழையில் கொஞ்சிடும் பறவைகளாய்
சாரல் காற்றினில் தேகங்கள் சிலிர்த்து
மோகத்தின் அலையில் நாணங்கள் வழிந்து
குடைகள் இருந்தும் உடல்கள் குளித்ததே......


உன்னோடு பேசுவதில் இசையும் பிறந்து
செவிகள் மயங்கிட தேனையும் பாய்ச்சி
சுகமான நாட்கள் இன்பங்கள் தருகின்றதே
சுற்றும் பூமியாய் இதயமும் சுழல்கின்றதே......

எழுதியவர் : இதயம் விஜய் (26-Feb-17, 12:35 pm)
பார்வை : 129

மேலே