இறைவனின் அருட் கொடை

இறைவனின் அருட் கொடை
உறைவிடம் முதல் அனைத்துமாகியது
குறைவின்றி எமக்குக் கிடைத்தது.
திறையான ஒழுக்கம் தேவையாகிறது.
இறைவனின் அருட்கொடை அளப்பரியது.
பெற்றவரெனும் பொன்னுறவு முதலாக
பொற்கிழியாக மழலைகள் உறவாக
கற்றுத் தேறி உற்றவரோடிணைவாக
ஏற்றமுடனிவை இறையளித்த அருட்கொடை.
அளவற்ற ஆசையைக் கொத்தாய்
உளமெனும் சிற்றிடத்தில் வைத்தாய்
அளவற்ற அருளாளனே முத்தாய்
அளந்தளிப்பாய் உன் அருட்கொடையை.
என்னரிய பிறவியொரு அருட்கொடை.
நின்மலமான அங்கங்கள் பெருங்கொடை
இன்னமுத இயற்கை அருங்கொடை.
நன்மையாய் வாழ்தலே சுபவிடை.
அல்லாவின் அருட்கொடை இஸ்லாம்.
இயேசுவின் அருட்கொடை கிறீஸ்தவம்.
சிவனின் அருட்கொடை சைவம் (இந்துத்துவம்)
சீலமாய் கடமைகளைச் செய்வோம்.
எழுத்தாணி தந்தாய் கரத்தில்
தொழுதிடும் அருட்கொடைகள் சிந்தனையில்.
முழுவதும் வரைந்திடும் எத்தனத்தில்
தொழுகிறேன் இறைவனுக்கு நன்றிகள்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்
6- 2016