ஊமை கண்ட கனவு

ஊமை கண்ட கனவு
திண்மை இதயத்துக் கனவுக்குள்
உண்மை மறைகிறது ஊமைக்குள்.
எண்ணவலை பின்னியும் நீருக்குள்
சின்னக் கூழாங்கல்லாகக் கனவு.
விரித்துக் கூற இயலாதது
விழலுக்கு இறைத்த நீரது
விரிவு அற்ற தவிப்பது
விடிவற்றது ஊமையின் கனவது.
ஊக்கப்பாடற்ற பலர் ஆசைகள்
ஊழ்வினை எனும் பெயரில்
ஆக்கப்பாடின்றி ஊர் அறியாமல்
ஊமை கண்ட கனவாகிறது.
பணமில்லா ஏழையின் கல்வியும்
தனமில்லாப் பெண்ணின் திருமணமும்
குணமில்லாக் குடிகாரன் இல்லறமும்
மணமற்ற ஊமைக் கனவாம்.
இசைவான பொருளாதாரம் இன்றி
அசைபோட்ட என்னாசையும் குன்றி
இசையரசி ஆகுமென் கனவு
ஊமை கண்டதான கனவு.
துழையற்ற ஊசியாய் ஒரு
முளையற்ற நிலமாய் ஒரு
குழையற்ற மரங்களாய் அரும்
குறையாகிறது ஊமைக் கனவும்.
சொல் நிலவு வட்டமற்று
கல்லான ஊமைக் கனவொன்று
வெல்ல இயலாத வாழ்வினியக்கம்
வல்லமை தராத கனவாகும்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்
6- 2016