தாலாட்டு
சின்னஞ் சிறுகுருவி சிலுசிலுக்கும் சிற்றருவி
கண்கள் பூவிரியும் கார்மேகப் பூங்குருவி
கன்னக் கதுப்புகளில் கவருகிற மருதாணி
அண்ணாந்து பார்க்கின்ற அழகான பேரரசி!
மானகிரி சுப்பையா மாமனிதர் பரம்பரையில்
தானுமொரு சந்ததியாய் தவழ்ந்துவந்த ராசாத்தி!
புன்னகையில் மயிற்பீலி பூஞ்சிரிப்பில் மழைச்சாரல்!
மண்ணில் பிறந்துவந்த மாசற்ற உயிர்ச்சிமிழி
முன்னம் புண்ணியத்தில் முளைத்து வந்த ரோசாப்பூ
பின்னும் புண்ணியத்தில் பிறந்து வந்த தாமரைப்பூ!
தென்றலையே வீசிவிடும் தேமதுரக் கைவீச்சு
வாடையின் ஓடவிடும் வலுவான உயிர்மூச்சு!
கோடையினைக் குறைக்கின்ற குதியாட்ட உடலசைவு!
ஓடையிலே தெறிக்கின்ற ஒற்றைத் துளிஅழகு!
கூடையிலே இருந்து குதித்து வந்த மாம்பிஞ்சு!
தேடிக் கண்டடைந்த திரவியமாம் பெருஞ்சொத்து
பாடிக் களிக்கின்ற பஞ்சவர்ணப் பூஞ்சிட்டு
எங்கள் இல்லத்தில் இன்னுமொரு புதுமகிழ்ச்சி
தங்கச் சுரங்கமென தவழ்ந்து வந்த ராசாத்தி!
கண்டெடுத்த முத்தோ? கைவந்த பெருஞ்சொத்தோ
முண்டி முளைத்து வந்த முன்னோர் மறுபிறப்போ?
சுண்டி வந்தவர்க்கு அளிக்க வந்த ஒரு சிறப்போ?
துண்டுச் சந்திரனோ? துளைக்காத சூரியனோ?
மண்டி முளைத்திருக்கும் மரிகொழுந்தோ? கற்பகமோ?
தொண்டு செய்ய வந்த சுடர்க்கொடியோ? அற்புதமோ?
விளங்கவந்த சந்ததியே! விளைந்துவந்த சந்தனமே!
துலங்கவந்த மாமணியே! தொட்டில்வளர் பூமணியே!
சலங்கையிடும் இன்னிசையே! சங்கம்வளர் பூங்கவியே!
முழங்கவந்த பெரும்புகழே! முச்சந்திப் பெரும்விளக்கே!
கலங்கரை விளக்கமெனக் கைகாட்டும் ஒளிச்சுடரே!
காலம் கொண்டுவந்த கவித்துவம்சேர் புதுக்கவியே
தாளம் தப்பாத தமிழ் யாப்பின் உயிர்க்கவியே
மேளம் நாதத்தை மேவிவரும் கவிச்சிந்தே!
நாடி நரம்புகளில் நகர்ந்துவரும் உயிர்த்துடிப்பே
கூடிக் கலந்திருக்கும் கொள்ளைப் பெருஞ்சிரிப்பே!
சிறுசே! சித்திரமே! சிங்காரப் பத்திரமே!
பெருசாய் எம்மனசில் பெருகுகிற நர்த்தகியே
வர்ஷா கல்யாணி வாழியரோ வாழி என!
புதுசா வாழ்த்துகிறேன் புதுமலரே கண்ணுறங்கு!
கற்பனைகள் ஆயிரமாய் கனவுகளும் ஆயிரமாய்
சொற்பதங்கள் மீறிச் சுழன்றுவரச் செய்தவளே!
வானம் பாடிஎன வட்டமிடும் கனவுதாசன்
கானம் பாடவைத்த கண்மணியே கண்ணுறங்கு!