அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மா
அம்மா......
உன் அன்பின்
பரப்பதனில்
பூமி ஓர் புள்ளியாகும்!. . .
உன் விழியோர
ஓர் துளியோ
ஆழியையே வழியவைக்கும்.. .
சொர்க்கத்தை
மடியாக்கி...
சொல்தன்னை
வேதமாக்கி..
கண்ணிரண்டை
என்காவலாக்கி
கதைகூறி வளர்த்திட்டாய். . .
நான் அழுக நீ சிரிக்க
ஈன்றெடுத்த அந்நாளன்றி
என்கண்ணை ஈரமாக்கி
நீ காண நான் கண்டதில்லை. . .
தலைமீது குடமேற்றி
இடுப்போரம் எனை இடுக்கி
வீசாத கையதனில்
கூடுதலாய் குடம்பிடித்து
சுமந்திட்டு நடந்தவளை
என் எதிர்காலம் தோளேறி
சேர்ந்திட்டே நெஞ்சழுத்தும். . .
நான் சுவைத்திட்ட
மீதமதை
நீ ருசிக்கக் கண்டதுண்டு
உனக்கென்றே உணவுதன்னை
ஓர் நாளும்
சமைத்தரியாய். . .
ஊரெல்லாம் பஞ்சம்வர
போட்டவிதை முளை மறுக்க
வறட்டுப் பொங்கலுக்கு
வாண்டு என்னை
குதூகலிக்க
நெஞ்சோரம் விஞ்சிநின்ற
மாங்கல்யத்தை
மஞ்சளாக்கி
சேட்டுக்கடை சேர்த்துவிட்டு
பூட்டுவித்தாய் புத்தாடை. . .
என் ஓர்துளி
இரத்தமதை
சிறுகாயம் சொட்டிவிட
உன் தலைமுட்டி
கண்ணீரால்
உடுப்பெல்லாம்
ஊறவைத்தாய். . .
உன்வயிற்று பள்ளமது
என் முகம் பார்த்து
நிரம்பிவிடும்...
என் நினைவே
உன் நெஞ்சமெலாம்
தூளி கட்டி விளையாடும்.. .
நானென்று ஏதுமில்லை
நீயேயன்றி மீதமில்லை
என்மூச்சாய் நீ இருக்க
எங்கே நான் தனித்திருக்க
கடவுளை கண்டு தொழ
கனவிலும் ஆசை இல்லை
உன் முகம் கண்ட கண்ணில்
கடவுளும் வெறும் கற்பனையே!. . . . .
சு.உமாதேவி