ஒரு பா ஒரு பஃது - அன்னை அந்தாதி
ஒரு பா ஒரு ப ஃது !
````````````````````````````
அன்னை அந்தாதி !
````````````````````````````
காப்பு !
````````````
அந்தாதி நானெழுத அன்னை வரமருள
தொந்தி கணேசா துணையிருப்பாய் - செந்தமிழில்
சொல்லடுக்கி மாலையாய்ச் சூட்டிடுவேன் ,ஏற்றென்றன்
வல்வினைகள் போக்கிடு வாய் .
நூல் !
```````````
வாயாரப் பாடி வணங்கிடுவேன் எந்தாயே
ஓயாதுன் நாமமே ஓதிடுவேன் - சேயாக
நெஞ்சோ டணைத்து நிலவாய்க் குளிர்ந்திடுவாய்
கொஞ்சுதமிழ்ப் பாடலைக் கேட்டு . 1
கேட்டு மிளகலையோ? கீதம் பிடிக்கலையோ ?
வாட்டிட எண்ணமோ? வாணியே ! - மீட்டும்
குழலிசையும் இன்பமது கூட்டலையோ?, தாயே !
மழலையெனை ஏற்பாய் மகிழ்ந்து . 2
மகிழ்ந்து வரங்கள் மனமுவந்(து) ஈந்தாய்
நெகிழ்ந்திடச் செய்திட்டாய் நீயே !- அகிலத்தில்
கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தருவாயே
வெண்டா மரைமலர் மேல் . 3
மேலகம் நீயளிப்பாய் மெய்மை யுணர்த்திடுவாய்
கால னணுகாமல் காத்திடுவாய் - ஞாலத்தில்
தீராப் பிணிகளுந் தீர்த்திட வாராய்,கண்
பாராய்! அகமலர்விப் பாய் . 4
பாயில் கிடவாமல் பாவியெனை ஏற்றுக்கொள்
கோயில் குடிகொண்ட கோமளமே !- நோயுற்று
வெந்துமனம் நோகுமுன்னே வேண்டுகிறேன் சக்தியே
வந்தென்னை யாட்கொண்டிடு வாய் ! 5
வாய்ப்பொன்று நல்கினாய் வையகத்தில் வந்துதித்தேன்
தாய்மனத் தோடெனைத் தாலாட்டு !-மேய்ப்பனிலா
ஆடாய்த் தடுமாறி அல்லலுற்றேன்! இல்வாழ்வில்
ஓடாகத் தேய்ந்தேன் உழன்று.6
உழன்று திரிந்தேன் உலகை வெறுத்தேன்
கழலைப் பிடித்துக் கசிந்தேன் - குழவியின்
விம்மலின்னும் காதில் விழவில்லை யோ?எனக்குச்
சும்மாவோர் ஆறுதல் சொல் . 7
சொல்லும் மொழியில் சுகப்படுவேன் உன்னாலே!
நல்லழகு நாயகியே ஞாலத்தில் - வெல்வதற்குன்
ஆசியொன்றே போதும்; அனுதினம் பாக்களால்
பூசிப்பேன் பொன்னுளம் பூத்து. 8
பூத்துக் குலுங்கும் புதுமலரின் பேரழகே
காத்திட வேண்டுமம்மா கற்பகமே !- மூத்தவளே!
கண்மலர்ந்து பாருமம்மா! காற்சதங்கை கொஞ்சிடவே
அண்டம் அசைந்திட ஆடு . 9
ஆடுமயில் மீதுவரும் ஆறுமுகன் அன்னையே!
வேடுவத்தி மாமியே! மீனாளே !- கூடுவிட்டென்
ஆவி பிரியுமுனே அன்புடனுன் காட்சியினைப்
மாவிருந்தாய்த் தந்திடு வாய் . 10

