எழுவாய்
எழுவாய் தமிழா என்றும் எழுவாய்
புழுவாய் உன்னைப் பார்ப்பவர் தம்மை
பழுதாய் எண்ணி தூக்கி எறிந்து
எழுவாய் தமிழா இன்றே எழுவாய்.
புலர்ந்திட உதிக்கும் பகலவன் போன்று
மலர்ந்து நீயும் மாண்புகள் பெற்று
அலட்சியம் செய்வார் ஆட்டம் முடித்து
இலட்சியம் கொண்டு தமிழா எழுவாய் .
மூத்த குடியாய் வாழ்ந்த உன்னை
நீத்துப் போக நினைப்பவர் யாவரும்
ஆத்திரம் தொலைத்து அன்பினைக் கொள்ள
பூத்து நீயும் பூமியில் எழுவாய் .
ஆற்று நீரையும் அடக்கிடத் துடிப்போர்
தோற்று இங்கே தொலைந்து மறைந்திட
ஏற்ற வழிகள் இங்கினி செய்ய
ஊற்றாய் தமிழா உலகினில் எழுவாய் .
சீறும் புலியாய் சிலிர்த்து நில்லு
ஊறும் உனக்கு வருமோ சொல்லு
மாறும் உலகில் மறுபடி வெல்லு
சீரும் சிறப்பும் சேர்ந்திட எழுவாய் .
அடிமை ஆக்கி ஆட்சி செய்ய
துடிப்பவர் தம்மைத் துரத்தி அடித்து
கொடியுடன் கோட்டையில் கொலுவீற் றிருக்க
இடியென தமிழா இன்றே எழுவாய்.
நீதானே தமிழா உலகத்தின் எழுவாய்
உன்னையா நினைத்தார் எலும்பிலாப் புழுவாய்
அன்னவர் தன்னை ஏற்றிடு கழுவாய்
வெற்றியை மட்டுமே இனிநீ தொழுவாய்.