தாழ்ந்தவன் நீ அல்ல
நொடி
ஆண்டாய் நகர்கிறது
நாடி இரண்டாய்
துடிக்கிறது
பாவையுள்ளம்
பாரம் நிறைகிறது
தேவை தேடி
பார்வை அலைகிறது
வெளியில் சொல்ல
வார்த்தை
வதைக்கிறது
உள்ளே வைக்க
உணர்வும்
கொல்கிறது
உணர்ச்சியொன்று
உருவாய்
முளைக்கிறது...
அன்னை அறிந்தால்
அடித்தே கொல்லுவாள்
தகப்பன் அறிந்தால்
தலையை வெட்டுவான்
தம்பி அறிந்தால்
தற்கொலைக்குத்
தூண்டுவான்
தங்கை அறிந்தால்
தரக்குறைவாய்
தூற்றுவாள்
அக்காள் அறிந்தால்
அக்கணமே
அரைவாள்
அண்ணன் அறிந்தால்
ஆள்வைத்து
புதைப்பான்
வந்துவிடு.. என்னவனே!
வந்துவிடு...
இங்கு
ஆணவம் முற்றி
என்னுயிர்
சிதையும்முன்னே
எனை அழைத்துச்
சென்றுவிடு...
காதலில் ஆடிய
விளையாட்டொன்று
கண்ணீரில்
ஆழ நேர்ந்ததடா....
என்னவனே!
ஊரே பழித்தாலும்
தாழ்த்தப்பட்டவன்
நீயில்லை...
தகுதி குறைந்தவனும்
நீயில்லை....
சாட்சியாய்த்தான்
முந்தானையை
உனக்கு
விரித்தேனடா....
ஆணவக்கொலையொன்று
அரங்கேறும்முன்னே
அங்கீகாரம் கொடுத்திடு
உலகிற்கு...
என் கணவன்
நீதானென்று
....