சந்திப்போமா

சாயுங்கால வேளையில சந்தக்கட வீதியில
***சந்திப்போமா நாம் சந்திப்போமா ?
தேயும்நிலா வானிருக்க தேவதநீ பக்கம்வர
***சிந்திப்போமா நாம் சிந்திப்போமா ?

ஊருசனம் பாக்குமுன்னே ஊதக்காத்து வீசயில
***ஊஞ்சலிலே சேர்ந்து விளையாடுவோமா ?
பேருபெற்ற கோயிலில பேச்சியம்மா சன்னிதில
***பேசிமணம்தான் முடிக்க வேண்டுவோமா ?

பஞ்சுமிட்டாய்ச் சீலகட்டி பையநீயும் கிட்டவர
***பட்டுக்கன்னம் தொட்டு முத்தமிடுவோமா ?
அஞ்சுகமே ஒன்னஅள்ள அத்தான்மனம் கெஞ்சுதடி
***அச்சம்விட்டு மெல்லக் கட்டியணைப்போமா ?

வட்டபொட்டு நெத்தியில வச்சிக்கிட்டு வாரவளே
***வச்சகண்ணால் செண்டாய் நீயும்பூத்தாயே !
சிட்டுப்போல ஒன்சிரிப்பில் சில்லுவண்டாய்ச் சுத்திவாரேன்
***செல்லக்கிளி கொஞ்சி பேசவருவாயா ?

மஞ்சத்தாலி ஒன்கழுத்தில் மாமன்கட்டும் நேரத்துல
***மைவிழியே ஓரக் கண்ணால்ரசிப்பாயா ?
மஞ்சத்துல வொன்னஅள்ளி மல்லிகப்பூ வாசத்துல
***மையலுடன் கதை சொல்லிமுடிப்பேனே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-May-17, 12:45 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 228

மேலே