உன்னை நினைத்தேன் என் அன்பே
உதிக்கும் கதிரின் அழகினைப்போல்
***உனக்குள் ஒளியாய்ப் பரவிடுவேன்
நதியின் கரையில் நாணலைப்போல்
***நளின மாக வருடிடுவேன்
புதிதாய்ப் பூத்த மலரினைப்போல்
***புனிதத் தோடு விளங்கிடுவேன்
மதியின் குளிர்ச்சி தந்துனையே
***மயங்க வைப்பேன் மன்மதனே!
கலைந்து போன கனவைப்போல்
***கவலை விலகி மறைந்துவிடும்
வலையில் மீனாய்த் துள்ளாதே
***வலியும் குறைந்து நீங்கிவிடும்
தலைக்கு மேலே வரும்வெள்ளம்
***தணிந்து வடிந்து வற்றிவிடும்
சிலைபோல் நானுன் அருகிருக்க
***திரும்ப மறுப்ப தேனய்யா??
நானும் நாணம் மிகக்கொண்டு
***நடந்தேன் சாலை யோரத்திலே
வானும் என்னைக் கண்டவுடன்
***மழையைத் தூறிக் களித்ததடா
தேனும் பாலும் கலந்தாற்போல்
***திளைத்தேன் காதல் பெருக்காலே
ஊனும் உயிரும் உருகிடவே
***உன்னை நினைத்தேன் என்அன்பே!
நீதான் எல்லாம் என்றாயே
***நெஞ்சில் நிறைந்து நின்றாயே
மாதா போல பேரன்பை
***வாரி என்னுள் பொழிந்தாயே
ஊதா வண்ண குறிஞ்சியென
***உள்ளம் குளிர வைத்தாயே
நாதா உன்போல் நல்லமனம்
***ஞாலந் தனிலே கண்டதில்லை!
மாயா வுலகில் மயங்காமல்
***மௌனத் தாலே உனைக்கரைப்பேன்
தேயா நிலவாய் மனவானில்
***தேடி அன்பைப் பகிர்ந்திடுவேன்
ஓயா அலையாய்த் தவழ்ந்துவந்து
***உரிமை கீதம் பாடிடுவேன்
தாயாய் மதிக்கும் காரணத்தால்
***தமிழ்போல் உன்னைப் போற்றிடுவேன்!
அன்பே என்றாய் அகமலர்ந்தேன்
***அமுத மொழியாய் அதைரசித்தேன்
இன்பப் பெருக்கில் எனைமறந்தேன்
***இதயச் சிறைக்குள் அகப்பட்டேன்
கன்னஞ் சிவக்க நீதந்த
***கட்டி முத்தம் இனிக்குதடா
தென்றல் தழுவும் போதினிலே
***தேகம் சுகத்தில் மிதக்குதடா!
மேய்ப்பன் நீயே என்றிருந்தேன்
***மெய்யாய் உன்னில் கலந்திருந்தேன்
காய்க்கும் மரமாய் எனைமாற்ற
***கருணை கூர்ந்து வருவாயா
வாய்த்த பிறவி வரமாக
***வண்ணப் பரிசைத் வழங்கிடுவாய்
தாய்மைப் பேற்றை அன்புடனே
***தைய லெனக்குத் தருவாயே!
வந்தேன் நீயே கதியென்று
***வையம் போற்ற வாழ்ந்திடலாம்
தந்தேன் என்னை உன்னிடத்தில்
***தாங்கிப் பிடிப்பாய் அரவணைத்து
சொந்தம் கூடி வாழ்த்துரைக்க
***சொர்க்க வாழ்வில் அடிவைப்போம்
முந்து தமிழாய்த் தித்திப்பில்
***முகமும் அகமும் மலர்ந்திடுவோம்!
விரிந்த விழியின் வீச்சினிலே
***விழுந்தேன் நானுன் காதலிலே
எரியும் மெழுகாய் உருகிவிட்டேன்
***என்னை முழுதாய்க் கரைத்துவிட்டேன்
தரிசாய்க் கிடந்த என்மனத்தை
***தழைத்து வளரச் செய்துவிட்டாய்
பிரிய முடனே அரவணைப்பாய்
***பிரிவு நம்முள் என்றுமில்லை!
கவிதை யாலே உளம்கொய்தாய்
***கனியும் அன்பைத் தினம்பெய்தாய்
குவிந்த இதழில் இதழ்பதிந்தாய்
***குறும்புத் தனத்தால் எனைக்கவர்ந்தாய்
செவிக்குள் தேனாய் இசைபொழிந்தாய்
***தெவிட்டாச் சுவையை நிதமளித்தாய்
புவியில் அழகன் நீதானே
***புரிதல் நிறைந்த மன்னவனே!