நண்பர்கள் யார் எத்தனை வகை
ஒரு அருமையான பொன்மொழி யார் யார் எங்கே நண்பர்கள் என்று சொல்கிறது:-
வீட்டில் உங்கள் மனைவியும்
வெளிநாட்டில் உங்கள் அறிவும் (புத்தி)
நோயாளிக்கு மருந்தும்
இறந்துபோனவனுக்கு தர்மமுமே நண்பர்கள்
முதல் மூன்றும் உலகம் முழுதும் புரியும். நாலாவது இந்துக்களுக்கு மட்டுமே புரியும். இது பாவ புண்ணியங்களில் நம்பிக்கை உடையோரின் கொள்கை. இறந்த பின்னரும் கூடவே வந்து காப்பாற்றுவது ஒருவனின் அறச் செயல்களே; அதாவது தர்ம கைங்கர்யமே.
வித்யாமித்ரம் ப்ரவாசேஷு பார்யாமித்ரம் க்ருஹஸ்ச ச
வ்யாதித ஔஷதம் மித்ரம் தர்மோ மித்ரம் ம்ருதஸ்ய ச
xxx
நண்பர்களின் 4 வகைகள்
ஔரச – ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள்
க்ருத சம்பந்த — திருமணத்தால் உண்டான உறவு
வம்ச- ஒரே பரம்பரையில் தோன்றியவர்கள்
ரக்ஷக – கஷ்ட காலத்தில் காப்பாற்றியவர்கள்
ஔரசம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம்
ரக்ஷகம் வ்யசனேப்யஸ்ச மித்ரம் ஞேயம் சதுர்விதம்
–காமாந்தகீய நீதிசாரஹ
நம்ம ஊர்க்காரன், நம்ம ஜாதிக்காரன், நம்முடைய நண்பனுக்கு நண்பன் என்பதெல்லாம் இப்போது உள்ள ஆசாரம். அந்தக் காலத்தில் இப்படி இல்லை என்பதை மேலே உள்ள ஸ்லோகம் நிரூபிக்கிறது.
இதில் சுவையான விஷயம் நாலாவது வகை நண்பர்களே!
சங்கத் தமிழ் இலக்கியத்திலும், சம்ஸ்கிருத இலக்கியத்திலும், தற்கால திரைப்படங்களிலும் இந்த வகை நண்பர்களைப் பார்க்கலாம்.
புலி தாக்கியபோது தன்னைக் காப்பாற்றியதால் காதல், நீரில் மூழ்கப் போகும்போது கப்பாற்றியவன் மீது காதல், விபத்தில் உதவியதால் காதல், பண உதவி செய்ததால் காதல் என்று பலவகைக் காதல் உறவுகள், நட்புறவுகளை இலக்கியத்திலும் திரைப் படங்களிலும் காண்கிறோம்.
வள்ளுவன் காட்டும் உவமைகள்
நட்பை, உவமைகள் மூலம் விளக்குவதில் வள்ளுவனுக்கு நிகர் வள்ளுவனே!
ஒருவன் ஆடை திடீரென நழுவினாலோ, காற்றில் பறந்தாலோ, கிழிந்தாலோ ஒருவனின் கைகள் எவ்வளவு விரைவாக உடற் பகுதிகளை மறைக்க தன்னிச்சையாகச் செல்லுமோ அவ்வளவு விரைவாக, கஷ்டகாலத்தில் உதவுபவனே உண்மை நண்பன் என்பதை வள்ளுவன் காட்டுவது போல வேறு எவரும் காட்டியதில்லை.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)
என்று கூறினான் வள்ளுவன்.
வள்ளுவன் தரும் இன்னொரு உவமை ‘நவில்தொறும் நூல்நயம்போலும்’, அதாவது படிக்கப் படிக்க நல்ல நூல்கள் இன்பம் தருவதைப் போல, நல்ல மனிதர்களின் நட்பும் இன்பம் சுரக்கும் என்பது வள்ளுவன் வாக்கு.
நவில்தொறும் நூல்நயம்போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு (783)
இன்னும் பல குறட்களில் சிரித்துப் பேசி மகிழ்வதற்கல்ல நட்பு, தவறு செய்தால் தட்டிக்கேட்கவும் வேண்டும் என்கிறான்.(784)
நல்லவர் நட்பு வளர்பிறைச் சந்திரன்; தீயவர் நட்பு தேய்பிறைச் சந்திரன் என்றும் பகர்வான் (782)
இருவரும் கட்டிக்கொண்டு நட்பை வெளிப்படுத்துவதைவிட உள்ளத்தில் நட்பு வேண்டும் என்பான் (786)
கோப்பெருங்சோழன், பிசிராந்தையார், பொத்தியார் – இவர்களின் நட்பை நன்கு அறிந்தவன் வள்ளுவன்.
தமிழ் & வேதம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
