தர்மம் தலைகாக்கும் - நேரிசை வெண்பா
இருவிகற்ப நேரிசை வெண்பா
தர்மம் தலைகாக்கும் என்று தயாளகுண
கர்மங்கள் செய்து வருவாயே! - அர்த்தமிலா
லஞ்சம், களவுகொலை, கற்பழிப்பு செய்தாலே
தஞ்சமில்லை! தண்டனைதான் உண்டு!
'தர்மம் தலைகாக்கும்' என்ற தலைப்பில் 30.11.2014 தினமலர் வாரமலரில் சொல்லப்பட்ட நல்லதொரு கருத்தை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
"நாம் சம்பாதிக்கும் செல்வத்திற்கு,
அரசு (வரி மற்றும் இதர அரசு காரியங்கள்)
இயற்கை (பஞ்சம், வெள்ளம், காற்று, நெருப்பு ஆகியவைகளால் விளையும் சேதம்)
திருடர்கள் (திருட்டு, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகியவை மூலமாகவும்)
தர்மம் (தெய்வ காரியங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவுவது) என்ற இந்த நான்கு பேரும் பங்காளிகள் ஆவர்.
'இந்த நான்கிலும், நான்காவதாகச் சொல்லப்பட்ட தர்மத்தை நாம் செய்தால், அந்தப் புண்ணியத்தின் பலத்தால், மற்ற மூன்று பங்காளிகளும், நம்மை நெருங்க மாட்டார்கள்.
ஆகையால், இருக்கும் போதும், இறந்த பின்பும் நன்மை தரக்கூடியது தர்மம் மட்டுமே".
தர்மம் செய்யுங்கள் என்றும், கொலை, கொள்ளை, லஞ்சம், பாலியல் பிரச்னைகள்
போன்ற தவறான வழிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் நல்வழியில் செல்ல எடுத்துச் சொல்லப்படுகிறது.