எழுத்துகள்

==========
சொல் வீடு கட்டுவதற்கு
செங்கல் ஆகிறது எழுத்து.

காகித நிலங்களில்
கவிதை பயிர்வளர்த்து
ரசனைக்குத் தீனிபோடும்
தாயல்லவா எழுத்து.

புத்தகச் செடியின்
பக்கக் கிளைகளில்
மொட்டுவிட்டு
சொற்களாய் பூத்திருக்கும்
எழுத்துகளில் மொய்க்கின்றன
வண்டு விழிகள்.

காகித ஊர்களின் வழி நீளும்
கோடுகள் என்னும் ஒற்றைத்
தண்டவாளத்தின் மேல் பயணிக்கும்
வார்த்தை ரயிலுக்கு ஒவ்வொரு எழுத்தும்
ஒவ்வொரு பெட்டிகளாகின்றன..

சாலையோர வழிகாட்டிப் பலகைகளில்
அமர்ந்திருக்கும் எழுத்துகள்
நாம் சேருமிடத்தைத் தீர்மானிக்கின்றன.

பேரூந்துகளின் நெற்றியில்
திருநீறாய் பூசப்பட்ட எழுத்துகள்
தெய்வமாய் நின்று நம்மை
ஊருக்குக் கூட்டிச் செல்கின்றன

பரீட்சைத் தாள்களில்
பரவிக்கிடக்கும் எழுத்துகள்
உருமாறி எங்கள் தலையெழுத்தாய்
வந்து மறைந்து கொள்கின்றன

முன்பெல்லாம் அபாய அறிவிப்பை
வீட்டின் வாசலுக்கு கூட்டிவரும்
தந்திகளின் வாயிலான எழுத்துகள்
இப்போது கைப்பேசிகளின் வழியே
கடுகதியில் வந்து விடுகின்றன.

தொலைந்து போகும் நம்மை
கண்டு பிடித்துத் தருகின்றன
அடையாள அட்டையுள்
அடைபட்ட எழுத்துகள்

எழுத்து இல்லாத காகிதம்
பொட்டிழந்த பூவைபோல்
பொழிவிழந்தே கிடக்கிறது.

ஓவியங்களால் நிரம்பி வழிந்தும்
எழுத்துத் தாமரை மலரா
பணத்தாள் குளங்களில்
பெறுமதி மீன்கள் நீந்துவதில்லை.

காகித தட்டுகளின் மேல்
பேனை உரல்கொண்டு
பிழிந்தெடுக்கும்
எழுத்து இடியப்பங்களை
சுவை சேர்க்கும் குழம்பின்றி
சும்மாமே விழுங்கி விடும் விழிகள்.

அலங்கரித்த ஆவணத் தேர்கள்
ஆக்கப்பூர்வ பவனி செல்ல
உத்தரவாதிகளின் கையெழுத்து
சிலையாக அமர்ந்தாலே ஆகும்.

தமிழ் எழுத்துக்கள்
நடக்கவே செய்கின்றன
அவற்றிற்கு கால்கள் உண்டு

கொடுமையைக் கண்டால்
முட்டவும் செய்கின்றன
அவற்றிற்கு கொம்பும் உண்டு

போராட்டத்திலும் இறங்கும்
அது ஆயுத எழுத்து.

உயிரையும் மெய்யையும் கலந்த
உயர்திணை என்று
மேன்மை கொண்ட எழுத்துகள்
அறிவுப் பாறைகளை செதுக்கி
நம்மை கல்விமான்கள் என்னும்
சிலையாக்கும் உளிகள்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Jun-17, 4:20 am)
Tanglish : ezhuthukal
பார்வை : 131

மேலே