அந்தரங்கம் புனிதமானது

"புவனா! என்ன சொல்றதுன்னே தெரியலே...... இதைப் பத்தி பேசக்கூடாதுன்னு நினைத்தேன்... ஆனால் யாரிடமாவது பேசினால் மனம் கொஞ்சம் லேசாகும்னு தோணுது.... அம்மாகிட்ட பேசமுடியாத பல விஷயங்களை உன்கிட்ட பேசி இருக்கேன்.... வா காபி சாப்டுண்டே பேசலாம்" புவனா கை பிடித்து கூட்டிப் போனாள் சுமிதா...

" சரி வா.... " இருவரும் கான்டீன் பக்கம் சென்றனர்.... அங்கு கூட்டம் அதிகம் இல்லை... இவர்கள் ஒரு ஓரமாக உட்கார்ந்தனர்...

"சொல்லு சுமிதா... என்ன? " குழப்பத்துடன் இருந்த புவனா கேட்க....

" எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 மாசம்தான் ஆறது....சந்தோஷமாத்தான் இருக்கோம்.... நேத்திக்கு அவர் வாக்கிங் போயிருந்தப்போ மெசேஜ் வந்தது அவருக்கு ..... சுதா கிட்டேர்ந்து.... ' நாளைக்கு நாம சந்திக்கலாமா? ரொம்ப ..அர்ஜென்ட்.... எங்கேன்னு அப்புறம் அனுப்பறேன்.... '

அவர் அப்படியே கடைக்குப் போயிட்டு வந்தார்.... அதற்குள் திரும்பவும் மெசேஜ்.... ' ஜீவா பார்க் சாயங்காலம் 5 மணி... மறக்காமல் வரவும்...சுதா...'

“எனக்கு கொஞ்சம் தடுமாற்றம்.... யாரு இந்த சுதா.... ? இதுவரைக்கும் அவள் பேச்சு எங்களுக்குள் வந்ததில்லை... எனக்கு தெரிஞ்சு அவா சொந்தக்காரா இந்தப் பேரிலே யாரும் இல்லை.... அவர் ஆபீஸ்லேயும் யாரும் இல்லை.... அப்புறம் யாரு? பார்க்ல போய் பேசற அளவிற்கு யாரு அவ்வளவு கிளோஸ் ? ஒன்னும் புரியலே.... அவர் மேலே சந்தேகம் எல்லாம் இல்லை... இருந்தாலும் மனசுக்குள்ளே ஒரு திக். திக். சின்ன நெருடல்..... நீ என்ன சொல்றே புவனா...? "

தெளிவில்லாமல் பேசிய சுமிதா கண்களை கவனித்தாள் புவனா.... கண்ணில் சந்தேகமும் இருந்தது... பயமும் இருந்தது....

"உம.ம் ...! " கன்னத்தில் கை வைத்து சற்று யோசித்தாள் புவனா... பின்பு நிதானமாக.... " ஏய் சுமி...! உன் மனசிலே கை வைத்து சொல்லு உனக்கு உன் ஹஸ்பண்ட் மேலே சந்தேகமா? முதல்ல சொல்லு..."

" அப்படி எல்லாம் இல்லை.... ஆனால்? " இழுத்தாள் சுமிதா.

"இந்த ரெண்டு மெஸேஜ் உன் ஹஸ்பேண்ட் இமேஜை கெடுத்துற்து ...நான் சொல்றதை கேட்கறதா இருந்தால் பேசலாம் இல்லைனா கிளம்பு ..." கொஞ்சம் கோபமாய் பேசினாள் புவனா..

" என்னடி இப்படி பேசறே? " சுமிதா

"பின்ன? ஒன்னு நீ அவருக்கு வந்த மெஸேஜை இக்னோர் பண்ணிருக்கணும்.... இல்லை அவர் கிட்ட யாருன்னு கேட்டிருக்கணும்... அதை விட்டுட்டு இப்படி என் கிட்ட வந்துப் பேசறே பாரு.... போடி ... இது மாதிரி வேறு யார்கிட்டயும் சொல்லலியே? பார்த்து.... அந்தரங்கம் புனிதமானது... முதல்ல புரிஞ்சுக்கோ.... "

மேலும் தொடர்ந்தாள் " உன் ஹஸ்பண்ட் கிட்ட போய் யாரு இந்த சுதானு கேளு.... உன் மனசிலே இருக்கிற சந்தேகத்தை சரி பண்ணிக்கோ... அப்பதான் நீ வாழற வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும் .....உனக்கு பயம் இருக்கு.... அதோட நீ இருக்கறது சரி இல்லை.... கிளம்பு.... லீவு சொல்லிட்டு போ... கண்ணுக்கு நேரே பேசு அவர் கிட்ட.... எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.. மனசிலே வெச்சு புழுங்காதே...." தெளிவாகவும் கொஞ்சம் கோபமாகவும் பேசிய புவனாவை பார்க்க சற்று ..... தயங்கினாள் சுமிதா....

இவர்கள் பேசி முடிக்குமுன் சுமிதா கணவரிடமிருந்து போன் வந்தது....

"சுமி...சாப்பிட்டியா? இன்னிக்கு கொஞ்சம் பெர்மிஷன் போட்டுட்டு என்னோட வரணும் ... லாஸ்ட் வீக் என் ஸ்கூல் பிரென்ட் மீட் பண்ணேன்.... சுதாகர்.... உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன். அவன் அம்மாவை ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணிருக்கான். பைனான்ஸ் ப்ராப்ளேம் .. ஹெல்ப் பன்றேனு சொல்லிருக்கேன். நீ கூட இருந்தால் நல்லா இருக்கும்.... 4 மணிக்கு ரெடியா இரு... நாம ஜீவா பார்க் போகணும். ஓகே? " என்ன பேசுவது என்றறியாமல் சிலையானாள் .... " என்ன சுமி? " " ஆஹ்... 4 மணிக்கு வரேன்... பை..."

தன் கணவர் பேசியதை புவனாவிடம் கூற.... " மனசு தெளிவாச்சா? "

"சே... ! எப்படி இப்படி சந்தேகப்பட்டேன் ... வெட்கமாக இருக்கு...." சுமிதா சொல்ல " இதைப் பற்றி என்கிட்டே பேசியதுதான் தப்பு..... அதற்கு பதிலாக " யாரு அந்த சுதா.... மெஸேஜ் வந்திருக்கு ? அப்படினு அவர்கிட்ட கேட்டிருந்தால் பதில் நேற்றே கிடைத்திருக்கும்..... " புவனா

" ஆமாம்.... மனசில் இருப்பதைப் பேசாமல் தான் பல சமயங்களில் வாழ்க்கையை இழக்கின்றோம்..... தேங்க்ஸ் புவனா.... நீ எவ்வளவு தெளிவாய் இருக்கே.... வேறு யாராவது உன் இடத்தில் இருந்திருந்தா என்னை மேலே உசுப்பேத்தி என் லைப் ஸ்பாயில் ஆகி இருக்கும்.... அவர் கால் கூட அட்டென்ட் பண்ணிருக்கமாட்டேன் .... " சுமிதா பேசியது உண்மை என்று உணர்ந்தாள் புவனா...

தன் டேபிளுக்கு வந்த சுமிதா பெர்மிசன் கேட்டு 4 மணிக்கு தயாராய் இருந்தாள்
....
கணவருடன் பைக்கில் செல்லும் பொழுது மனதிற்குள் " அந்தரங்கம் புனிதமானது ! எத்தனை உண்மை..... " நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்

எழுதியவர் : மைதிலி ramjee (2-Jul-17, 4:33 pm)
பார்வை : 2167

மேலே