மூப்பில் ஒரு குழந்தை பருவம்
அம்மா அன்று நீ சொன்னது
இன்று என் நினைவில் வருகிறது
"அடியே,இதோபார், நீ அன்று
ஓர் சின்ன குழந்தை ;தவழ்ந்து
தவழ்ந்து வந்து என் மடியில் வந்து
உட்கார்ந்து உன் பொக்கை வாய்
திறந்து கள்ளச்சிரிப்பு சிரித்து
சைகையில் ஏதேதோ கேட்பாய் ....
ஒன்னும் கிடைக்கவில்லை என்று
தெரிந்த பின் அழுது ,சிணுங்கி
அப்படியே தூங்கியும் விடுவாய் "
அது என் குழந்தைப் பருவம்
அம்மா இன்று என்னெதிரில்
நீ .................ஒரு குழந்தை போல் ..........
என் பெண்ணிற்கு பெண்ணின்
குழந்தைமுன் அந்த குழந்தை போல்
.............அதே பொக்கை வாய்
கள்ளச் சிரிப்பு.......................
உனக்கும் சில தேவைகள் அந்த
குழந்தையின் தேவைகள் போல் .......
என்னால் சில காரணங்களால்
கொடுக்க முடியவில்லை...நீயும்
சிணுங்கி ஓர் மூலையில் தூங்கிவிட்டாய்
அன்று நான் உன் குழந்தையாய்
தூங்கியது போல்......................
மூப்பிலும் ஒரு குழந்தைப் பருவம்
தாயே நீ எப்போதும் என் அன்னை
இன்று நீ என் குழந்தை அம்மா !