வாழ்த்துப்பா

வாழ்த்துப்பா :-


அறிவியலில் பட்டத்தைப் பெற்ற போதும்
------ அருந்தமிழை நெஞ்சிற்குள் வைத்த தாலே
குறியாக மொழிப்புலமை பெறுவ தற்கு
------- குவிந்திருக்கும் சங்கநூல்கள் தெளிவாய்க் கற்றும்
நெறியாக யாப்புதனை ஆய்ந்த றிந்தும்
------- நேரியநல் சாராதான் மரபு பாவைக்
குறிக்கோளாய் எற்றின்று முகநூல் தன்னில்
------- குவிக்கின்றார் கவிதைகளை உலகே போற்ற !!!

வெண்பாவில் விருத்தத்தில் கலிப்பா தன்னில்
------- வெற்றிநடை போடுமிவர் சிந்து வோடு
வண்ணங்கள் பாடுவதில் விஞ்சி நின்று
------- வகைவகையாய்த் தருகின்றார் சுவைத்தே போற்ற
பண்ணவரின் சொற்களிலே படிந்து வந்து
------- படிப்பவரின் மனந்தன்னை இனிக்கச் செய்யும் .
கண்ணாக இவர்தமிழைக் கொண்ட தாலே
------- கற்கண்டே இவரெழுதும் பாட லெல்லாம் !!!


மனிதத்தை வலியுறுத்தி தாய்மை தன்னின்
------- மகத்துவத்தை எடுத்துரைத்துக் காதல் அன்பு
புனிதத்தைத் தெளிவாக்கித் தமிழர் பண்பின்
------- பூரித்த ஒழுக்கத்தைச் சொல்லும் நூலாம் .
கனிச்சுவையாய்த் தமிழ்ச்சுவையை அள்ளி யள்ளிக்
------- கவிதையிலே தரும்நூலாம் சாரா வின்நூல் .
இனித்தமுடன் படித்திடுவோம் ! இந்நூல் போன்றே
-------- இன்னும்பல் நூல்படைக்க வாழ்த்து கின்றேன் !!!


அன்புடன்
புலவர் பாவலர்
கருமலைத் தமிழாழன் ,
மாநில மதிப்பியல் தலைவர் ,
தமிழகத் தமிழாசிரியர் கழகம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Jul-17, 5:54 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 77

மேலே